புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 09, 2024)

மனந்திரும்புதலும் மன்னிப்பும்

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடும்பத்தினர், தங்களுடைய பிள்ளைகளில் ஒருவனின் தவறான நடத்தையினாலே வெகுவாய் அவமானமடைந்தார்கள். அதனால், அந்த ஊரிலே இனி வாழ்வது கஷ்டமாக இருந்ததால், தூரத் தேசத்திலுள்ள ஊரொன்றுக்கு சென்று அங்கே வாழ்ந்து வந்தார்கள். புதிய ஊரிலுள்ள ஜனங்கள், ஏன் ஊர்விட்டு ஊர்மாறி யிருக்கின்றீர்கள் என்று கேட்கும் போது, அதற்கு மறுமொழியாக, முன்பு இருந்த ஊரின் பொருளாதார நிலை மைகள் நன்றாக இல்லை, எனவே பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, இந்த ஊருக்கு இடம்பெயர்ந்தோம் என்று கூறிக் கொள்வார்கள். அவர்கள் கூறிய மறுமொழியில் உண்மை உண்டு. அதாவது, அவர்கள் முன்பு வாழ்ந்த ஊரின் பொருளாதர நிலைமை சீராக இருக்கவில்லை. அதே வேளையில் அவர்கள் கூறிய மறுமொழியில் உண்மையற்ற நிலையும் உண்டு. அதாவது, அவர் தாங்கள் வாழ்ந்த ஊரைவிட்டு, புதிய ஊருக்கு இடம்பெயர்ந்ததின் அடிப்படையான காரியம் பொருளாதரம் அல்ல, மாறாக, அவர்கள் பிள்ளைகளில் ஒருவனின் தவறான நடத்தையாகவே இருந்தது. இந்த சம்பவத்தின் கருப்பொருளாவது, பூமியை கர்த்தர் குடியிருப்புக்கு ஏற்படுத்தினார். எனவே, மனிதர்கள் இடம்விட்டு இடம் மாறுவது அவர்களின் சொந்த தீர்மானம், ஆனால், மனமாற்றம் வழியாக வாழ்க்கை முறை மாறாமல், மற்றவர்களின் குறைகளைப்பற்றி பேசிக் கொண்டிரு ப்பதால், மனிதர்களின் வாழ்க்கையில் நன்மையான மாற்றங்கள் ஏற்படப்போதில்லை. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்படிக்கு தேவனானவர் சபையை ஏற்படுத்தனார். எனவே, ஒரு விசுவாசியானவன் எங்கே தேவனை ஆராதிக்கச் செல்கின்றான் என்பது அவனுடைய தீர்மானம். அவன் சத்தியத்தை சுத்தமாக போதிக்கும் ஒரு சபைக்குச் சென்றாலும், தன் வாழ்விலிருக்கும் பழைய காரியங்களைவிட்டு மனந்திருப்ப மனதில்லாதிருப்பானாகில், அவன் எங்கு சென்றாலும், அதனால் அவனுக்கு உண்டாகும் பலன் அற்பமானமாகவே இருக்கும். பிரியமானவர்களே, பொதுவாக வாழ்வில் ஏற்படும் புதிய மாற்றங்கள், கொஞ்சக் காலம் மனதில் புத்துணர்சியைத் தரும். அந்த நாட்களை, நாம் நம்முடைய பழைய சுபாவங்களைவ விட்டு மனம்திரும்பி, கிறிஸ்து இயேசுவின் திவ்விய சுபாவங்களில் வளரும்படிக்காக, நம் வாழ்க்கைமுறையானது மாறும்படிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, நீர் மனந்திரும்பும் பாவியை மன்னிக்கின்றவர் என்பதை அறிந்த நான் என் பாவங்களை மறைக்க துணியாமல், உம்மிடம் அறிக்கைபண்ணி வாழ்வடைய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9