புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 05, 2024)

கருத்துள்ள வாழ்க்கை

கொலோசெயர் 3:24

எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங் கள்.


திருமணத்தின் ஆரம்ப நாட்களிலே இளம் தம்பதிகள், புரிந்துணர்வோடு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சந்தோஷமாய் வாழ்ந்து வந்தார்கள். 'இதுதான் வாழ்க்கை! இதெற்கெல்லாம் எங்களுடைய பெற்றோர் ஏன் இவ்வளவாய் கஷ்டப்பட்டார்கள்' என்று கூட ஆச்சரிப்பட்டார்கள். நாட்கள் கடந்து செல்லும் போது, அவர்களுடைய சந்தோஷம் குறைவுபடத் தொடங்குவதையும், வாழ்க்கை முன்பு போலவே சலிப்புள்ளதாக வழமைக்குத் திரும்புவதை உணர ஆரம்பித்தார்கள். அவர்கள் சட்டபூர்வமாகவும், தேவ சமுகத்தின் முன்னிலையிலும், கணவன் மனைவியாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும், அவர்கள்; ஐக்கியமாக வாழ்வதற்கு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, நல்லிணகத்தோடு, அன்பிலே வளரும்படிக்கான கிரியைகள் நடப்பிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டார்கள். சிலர் அவ்வண்ணமாகவே ஒன்றுபட்டு, நற்கிரியைகளை நடப்பித்து தங்கள் வாழ்க்கையில் வரும் சவால்கள் யாவற்றையும், இருவருமாக மேற்கொண்டு வெற்றி வாழ்க்கை வாழ தங்களை அர்பணித்துக் கொள்கின்றார்கள். வேறு சிலரோ, தங்கள் கண்போன போக்கிலே வாழ்ந்து, திருமண ஒப்பந்தத்தை உடைத்துக் கொள்கின்றார்கள். இன்னும் சிலரோ, என்ன செய்வது, மனிதர் முன்னிலையிலும், தேவன் முன்னிலையிலும் என் வார்த்தையை கொடுத்து விட்டேன். எப்படியாவது, இந்த வாழ்க்கையை சுமக்க வேண்டும் என்று மனச்சலிப்போடு தினமும் கடமைகளை செய்து வருகின்றார்கள். மேற்கூறியவைகளை மையமாக வைத்து, கிறிஸ்துவோடுள்ள உங்கள் உறவை நீங்களே ஆராய்ந்து பார்க்க முடியும். உபத்திரவங்களும் சவால்களும் அதிகமாக இருக்கின்றதே, இனி என்னால் முடியாது என்று பின்வாங்கி, கிறிஸ்துவை விட்டு ஓடிவிடலாம் என்ற எண்ணமுடையவர்களாக இருக்கின்றீர்களா? அல்லது என்ன செய்வது? பலர் முன்னிலையில் ஞானஸ்நானம் எடுத்து விட்டேனே, ஏதோ சமாளித்துக் கொண்டு போவோம் என்று அரைமனதோடு வாழ்கின்றீர்களா? அப்படியாக அல்ல பிரியமானவர்களே, உயர்விலும், தாழ்விலும், வேதனையிலும் சோதனையிலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னை ஒன்றும் பிரிக்காது என்ற நிச்சயத்தோடு, வெற்றி வாழ்க்கை வாழும்படி நாம் நம்மை முழுமனதோடு அர்பணிக்க வேண்டும். சத்திய ஆவியானவர்தாமே பெலன் ஈந்து சகல சத்தியத்திலும் நம்மை வழிநடத்திச் செல்வாராக.

ஜெபம்:

முடிவில்லா வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு கிரியைகளை நடப்பிக்காமல், முழு இருயத்தோடு உம்மை சேவிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:15-16