தியானம் (ஆனி 25, 2024)
மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்
2 கொரிந்தியர் 4:16
எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
'என்னாலேயன்றி உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது' என்று கூறிய அரவணைக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே, வாழ்விலே வருதப்பட்டு பாரம் சுமப்பவர்கள் எல்லாரையும் இளைப்பாறுதல் பெறும்படிக்கு தம்மண்டை வருமாறு பரிவாக அழைக்கின்றார். இந்த உலகிலே வாழ்வடைய வேறு வழியேதும் இருக்கவில்லை. அதனால்தான் மனிதகுலம் பாவத்தில் அழிந்து போய்விடாமல், பரலோகத்தில் நித்திய ஜீவனை அடையும்படி, ஆண்டவராகிய இயேசுதாமே விண்ணுலகைவிட்டு, தம்மை தாழ்த்தி, மண்ணுலகிற்கு வந்தார். எத்தனை கோடி செலவு செய்தாலும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தை மனிதர்களுக்கு இலவசமாக கொடுக்கும்படிக்கு அவர் சித்தமுள்ளவராக இருக்கின்றார். ஆனால், மனிதர்களோ, அந்த அழைப்பை உணர்ந்து கொள்ளாமல், தங்கள் வெவேறு கிரியைகள் வழியாக சமாதானத்தை நாடித் தேடுகின்றார்கள். சில வேளைகளில், சில விசுவாசிகள் கூட இந்த சத்தியத்தை மறந்து போய்விடுகின்றார்கள். மனிதர்களை தண்டிப்பதில் அன்புள்ள தேவன்தாமே விருப்பமுடையவர் அல்லர். அவர் துன்மார்க்கர் தங்கள் பாவத்தில் அழிந்து போவதில் பிரியப்படுகின்றவருமல்ல. அப்படியானால், விசுவாச மார்க்கத்தாரின் வாழ்விலே சில நெருக்கங்களை தேவன்தாமே அனுமதிக்கின்றார். பரிசு த்தவான்கள் சீர்பொருந்தும்படிக்கும், அவர்கள் தம்மைப்போல மாறும் படிக்கும் தேவனானவர் சித்தமுள்ளவராகயிருக்கின்றார். யார் இந்த பரிசுத்தவான்கள்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத இரத்தத்தினாலே உண்டான மீட்பை பெற்ற யாவரும் பரிசுத்தவான்களாகும்படி அழைப்பை பெற்றிருக்கின்றார்கள். அந்த அழைப்போடு பரிசுத்தமாகுதல் முடிவடைந்து போவதில்லை. ஒரு சகோதரனின் குற்றத்தை மன்னித்து விடுவதோடு ஒரு விசுவாசியாவன், தேவ சாயலை அடைந்து விடுவதில்லை. அவன் நாளுக்கு நாள் மாற்றமடைய வேண் டும். ஆனால், விசுவாசிகளின் வாழ்க்கையிலோ, சில வேளைகளிலே, சில காரியங்களிலே மாற்றமடைவதற்கு தங்களை விட்டுக்கொடுக்காமல், தங்கள் மனதை கடினப்படுத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் உண ர்வடையும்படிக்கு சில வேளைகளிலே, பிதாவாகிய தேவன்தாமே சில சிட்சைகளை வாழ்க்கையிலே அனுமதிக்கின்றார். அவைகள் வழியாக வும் அவர் தம்முடைய பிள்ளைகளை சீர்பொருந்தப் பண்ணுகின்றார்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நான் இந்த உலத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ்ந்து, மனதை கடினப்படுத்தாமல், அனுதினமும் உம்முடைய சாயலிலே வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 3:12