புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2024)

விரிவும் விசாலமுமான வாசல்

மத்தேயு 7:13

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.


ஒரு ஊரிலே தங்கள் இரண்டு சிறு பிள்ளைகளோடு வாழ்ந்த பெற்றோரானவர்கள், தங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்குவிட தீர்மானம் செய்து, விளம்பரப்படுத்தினார்கள். அந்த ஊருக்கு புதிதாக வந்த இரண்டு வாலிபர்கள் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். அந்த வாலிபர்கள் நற்பண்புகளோடு தங்கள் பிள்ளை களிடத்தில் பழகி வருவதை கண்டு சந்தோஷப்பட்டார்கள். நாளாடை விலே அந்த வாலிபர்கள் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்கள் என்று கண்டு ஆச்சியப்பட்டார்கள். எனினும், அவர்கள் வீட்டிற்குள் புகைக்காமல், வெளியிடங் களிலே புகைக்கின்றார்கள், அது அவர்களுடைய பாடு என்று விட்டுவிட்டார்கள். சில மாதங்கள் கடந்த பின்பு, வருடத்தின் கடைசி நாளிலே, வேறு சில வாலிபர்களும் வந்து அந்த வீட்டிலே, நடுஇராத்திரி வரை ஆடிப்பாடி உல்லாசமாக இருந்தார்கள். அதுவும் வருடத்தில் ஒருமுறை நடைபெறுகின்றது என்று கூறி வீட்டார் அதையும் விட்டுவிட்டார்கள். காலப்போக்கிலே, அவர்கள் வீட்டிலே மதுபானம் அருந்தி வெறி கொள்கின்றார்கள் என்று கண்டு கொண்டார்கள். அந்த வாலிபர்கள் வாடகையை ஒழுங்காக கொடுக்கின்றார்கள், பிள்ளைகளோடு நட்பாக பழக்கிக் கொள்கின்றார்கள் என கூறி அவர்களை அப்படியே விட்டுவிட்டார்கள். ஒரு நாள் இரவு அவர்கள் குடும்பமாக உணவு உண்டு கொண்டிருக்கும் போது, அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவன், நானும் வளர்ந்து அந்த அண்ணாமார் மாதிரி வரவேண்டும் என்று அவர்கள் பேசக்கேட்டு சில நெறியற்ற வார்த்தைகளைக் கூறினான். அதைகேட்ட தகப்பனானவர் கோபம் கொண்டு தன் மகனானவனை கடுமையாக கண்டித்துப் பேசினார். அவர்கள் எவ்வளவு கண்டித்தாலும் அந்த பிள்ளையானவனின் மனதிலே அந்த வாலிபர்களின் போக்கு நன்றாக பதிந்து விட்டது. அந்தப் பெற்றோராவர்கள். மேலதிக வருமானத்தை விரும்பி தீமையறியாத தங்கள் பிள்ளைகளின் மனதிலே தவறான வித்தை விதைத்து விட்டார்கள். பிரியமானவர்களே, இவ்வண்ணமாகவே இன்று சில ஐக்கியங்களிலும், தங்கள் கதவுகளை அகலமாக திறந்து, எப்படிப்பட்டவர்களும் வரலாம் என்று கூறி, வந்தவர் களை வந்த வண்ணமாகவே கால எல்லையின்றி இருப்பதற்கு இடங் கொடுத்துவிடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்களை கவனித்து வளரும் சிறுபிள் ளைகளைக் குறித்து யார் பதில் கூறுவது? எனவே விசாலமான வாசல் களை குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

நீதியும் பரிசுத்தமுமுள்ள தேவனே, உம்முடைய சத்திய வார்த்தைகளை சமரசம் செய்யாமல், உள்ளபடி போதிக்கவும், அதன்படி நடக்கவும் எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 1:7