புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2024)

நம்மை சூழ்ந்திருக்கும் மேன்மை

சங்கீதம் 34:7

கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.


அந்நிய நாட்டு படைகள், குதிரைகளையும் இரதங்களோடும் பலத்த இராணுவத்தோடும் வந்து, இராக்காலத்திலே, தேவனுடைய மனுஷனாகிய எலிஷா இருந்த பட்டணத்தை சுற்றி வளைந்துகொண்டார்கள். ஏனெனில் தேவ மனுஷன் அவர்களுடைய இரகசியமான சதித்திட்டங்களை வெளிப்படுத்தின்றான். எனவே, அவனை கைப்பற்றி னால், அந்த தேசத்தை முற்றுகை போட்டு மேற்கொண்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அந்த அந்நியர்கள், மெய்யான தேவனாகிய கர்த்தருடைய மனுஷன் என்பதின் பொருளை அறியாதிருந்தார்கள். அந்த அந்நியர்கள் மட்டுமல்ல, தேவனுடைய மனுஷனாகிய எலிஷாவின் வேலைக்காரனும் அதை அறியாதிருந்தான். அந்த வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் தேவனடைய மனுஷனாகிய எலிஷhவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்றான். அதற்கு தேவனுடைய மனுஷன் பிரதியத்தாரமாக: பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந் தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். ஆம் பிரியமானவர்களே, நாமும் மாம்ச கண்களால் நம் சூழ்நிலைகளை நோக்கி பார்ப்போமென்றால், எலிஷhவின் வேலைக்கார னைப் போல, பிரச்சனைகளை கண்டு பயப்படுகின்றவர்களாக இருப்போம். ஆனால், நம்முடைய ஆவிக்குரிய விசுவாசக் கண்களால் நோக்குவோமென்றால், தேவனாகிய கர்த்தரின் பாதுகாப்பை நாம் உணர்ந்து கொள்ளுவோம். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்கள் சேனையாக திரண்டு வந்தாலும், நீங்கள் பயப்படவேண்டாம். ஆனால் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். அவருடைய அரணான பாதுகாப்புக்கு உங்களுக்குரியதாகும்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, மாம்ச கண்களால் நான் என் பிரச்சனைகளை நோக்காமல் விசுவாசக் கண்களால் நோக்கிப் பார்த்து, உம்முடைய மேன்மையான பாதுகாப்பை அறிந்து கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:28