தியானம் (வைகாசி 13, 2024)
அரணும் கோட்டையும்
சங்கீதம் 31:3
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த தேசிய பொலிஸ் அதிகாரியானவர், தன்னுடைய மகனானவனுக்கு சின்ன வயதிலிருந்து நல்ல புத்திமதிகளை கூறி வளர்த்து வந்தார். மகனானவன், வாலிப வயதையடைந்ததும், அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து, எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக் கூடாது என்ற தெளிவானதும் திட்டமானதுமான அறிவுரையை பல முறை கூறியிருந்தார். ஒரு நாள் அதிகாரியின் மகனானவன், தன் நண்பர்களோடு சேர்ந்து, தன் தகப்பனானவர் போக வேண்டாம் என்று கூறியிருந்த இடத்திற்கு போவதற்கு துணிகரம் கொண்டான். அங்கு சென்றதும், அந்த பகுதியிலே வாழ்ந்து வந்த துன்மார்க்கர்களும், வீணர்களும், அந்த வாலிபர்களை தாக்கி கொள்ளையடிக்கும்படிக்கு சூழ்ந்து கொண்டார்கள். அந்த வேளையிலே, பொலிஸ் அதிகாரியின் மகனானவன் அவர்களை நோக்கி: நான் யார் தெரியுமா? இன்னாருடைய மகன். எனவே, எச்சரிக்கையாயிருங்கள் என்று கூறினான். அதைக் கேட்ட அந்த துஷ்ட மனிதர்கள் மூர்க்கம் கொண்டு, நீ இன்னாருடைய மகனாக இருந்தால், நீ இங்கே வரக்கூடாது என்று உனக்கு யாரும் சொல்லி கொடுக்கவில்லையா என்று அவனை அதிகமாக அடித்து, குற்றுயிராக விட்டு சென்றார்கள். தன் மகனானவன் சுகமடைந்த பின்பு, அந்தப் பொலிஸ் அதிகாரியனாவர் அவனை நோக்கி: நீ ஏன் என் சொல்லை மீறி போகக்கூடாத இடத்திற்கு சென்றாய் என்று கடிந்து கொண்டார். அதற்கு அவன்: அப்பா, நீங்களும் அங்கே அடிக்கடி சென்று வருகின்றீர்கள், உங்களுடைய பாதுகாப்பு எனக்கும் இருக்கின்றது தானே என்றான். அதற்கு தகப்பனானவர்: மகனே, அது என்னு டைய சேவை. என்னுடைய வேலை. அதற்கென நான் பிரத்தியேகமாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கி ன்றேன். ஜனங்களை விடுதலையாக்கவும், சட்டத்தை நிலை நாட்டவும் நான் அங்கே சென்று வருகின்றேன். என்னுடைய பாதுகாப்பு உனக்கு எப்போதும் உண்டு. ஆனால், நீ நான் போட்ட பாதுகாப்பு வலையத்தை தாண்டிச் சென்றால் அதனால் உனக்கு ஆபத்து நேரிடும் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தரே நம்முடைய கோட்டையும் அரணுமாயிருக்கின்றார். எனவே அந்தக் கோட்டையை விட்டு விலகாமல், அதற்குள் நாம் தங்கியிருக்க பழகிக் கொள்ள வேண்டும். நாம் அவருடைய வார்த்தையின் வெளிச்சத்திலே வாழும் போது அவருடைய அரணுக்குள் தங்கி வாழ்கின்றவர்களாக எப்போதும் காணப்படுவோம்.
ஜெபம்:
சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனே, உம்முடைய பிள்ளையாகிய நான், உம்முடைய ஆலோசனைகளையும் எச்சரிப்பையும் அசட்டை பண்ணாமல் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 6:13