புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2024)

இன்னும் தேவை

சங்கீதம் 119:103

உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.


இந்த உலகத்தினால் உண்டாக்கப்பட்டு, இந்த உலகத்தோடு அழிந்து போகின்ற, நன்மையாகவே தோன்றுகின்ற எந்த காரியத்தையும் நாம் மட்டாகவே, தேவைக்கு ஏற்றபடி எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, இந்த உலகத்திலிருந்து நாம் கடந்து போகும்போது கொண்டு செல்ல முடியாத எந்த காரியமும் நம் வாழ்விலே மிதமிஞ்சிப்போகும் போது, அதனால் பல கண்ணிகளும், ஆரோக்கிய குறைபாடுகளும், சமாதானமற்ற வாழ்வும் அவைகளின் பின் விளைவுகளாக இருக்கும். தேனை கண்டு பிடித்தால் மட்டாக சாப்பிடு, மிதமிஞ்சிப்போனால் வாந்தி உண்டாகும். ஆனால், 'தேனினிமையில் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே' என்று ஒரு பாடலின் வரியானது அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த நாமத்தின் இனிமையை ருசிபார்த்தவர்கள், அதன் மேன்மையை அனுபவித்தவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, அவரை அறிகின்ற அறிவிலே வளர வளர, 'எனக்கு இன்னும் தேவை' என்றே கூறிக் கொள்கின்றார்கள். வானோர், பூதலத்தோர் போற்றும் நாமம், இயேசுவின் நாமம். பேய்கள் நடுங்கும் நாமம் இயேசுவின் நாமம். நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம், இயேசுவின் நாமம். எல்லா நாமத்திற்கும் மேலான நாமம், இயேசுவின் நாமம். இயேசுவின் நாமத்திலே, மன்னிப்பு, இரட்சிப்பு, விடுதலை, சமாதானம், நித்திய வாழ்வு நமக்கு உண்டாயிருக்கின் றது. அவருடைய அன்பு, அகலம், நீளம், ஆழம், உயரம் அறிய முடியாதது. இயேசுவின் நாமமானது, எவருடைய வாழ்விலும் மிதம்மிஞ்சிப் போவதில்லை. ஆண்டவர் இயேசுவை அறிகின்ற அறிவிலே வளர்வதென்பது, பரிசுத்த வேதாகமத்தை அனுதினம் வாசித்து, தியானித்து மனனம் செய்வதோடு முடிவதில்லை. வாழ்வின் நாளாந்த அலுவல்களை கவனிக்காமல், தேவ செய்திகளை கேட்டு, ஜெபித்துக் கொண்டிருப்படிருப்பதென்பது பொருளல்ல. பரிசுத்த வேதாகமத்தை, வாசித்து, தியானித்து, மனனம் செய்து, தேவ செய்திகளை கேட்டு, அனுதினமும் ஊக்கமாக ஜெபித்து, நம் அனுதின வாழ்க்கையிலே தேவ வார்த்தைகளை அனுபவித்து ருசி பார்க்கின்றவர்களாக இருங்கள். தீமைகளை நன்மை செய்வதினாலே மேற்கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அறிவுக்கெட்டாத தேவ அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறைவாகுங்கள்.

ஜெபம்:

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற தேவனே, நான் அனுதினமும் உம்மை அறிகின்ற அறிவிலே வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 3:17-19