புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 26, 2024)

மறைதிருக்கும் அடிமைத்தன கட்டுக்கள்

கொலோசெயர் 3:16

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக;


முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தீர்கள், தேவனுடைய கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு அடிமைத்தன கட்டுக்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டீர்கள். அடிமைத்தன கட்டுக்கள் என்று கூறும்போது, பொதுவாக விசுவாசிகளானவர்கள், மதுபானம், புகைப்பிடித்தல், போதைவஸ்து, மோக பாவங்கள், விக்கிரக ஆராதனை, நாள் பார்த்தல், குறி சொல்லுதல், பில்லி சூனியம், நெறிகெட்ட திரைபடங்கள் போன்றவைகளையே கருத் தில் கொள்கின்றார்கள். அவை உண் மையிலே அடிமைத்தன கட்டுகளாகவே இருக்கின்றது. 'சென்ற வாழ் நாட்காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்து கொண்ட போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொ ண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.' (1 பேதுரு 4:3). என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஆனால், அடிமைத்தன பட்டியல் அத்தோடு முடிந்து போவதில்லை. மேற்குறிப்பிட்ட காரியங்கள் ஒன்றையும் செய்யாத சில விசுவாசிகளின் மனதிலே கசப்பு, வன்மம், பகை, வைராக்கியம், பிரிவினை போன்ற மாம்சத்தின் இச்சை கள் இருதயத்திலே மறைந்து வளர்ந்து பெருகி, அவர்கள் வாழ்க்கையை அவைகள் மேற்கொண்டு விடுகின்றது. அதனால் அவர்கள் அத்தகைய மாம்ச கிரியைகளுக்கு மறுபடியும் அடிமைகளாகி விடுகின்றார்கள். வெளியரங்கமான மாம்சகிரியைகளுக்கு அடிமைகளாக இருப்பவர்கள், ஒருவேளை தங்கள் கிரியைகளைவிட்டு ஓய வேண்டும் என்னும் மனநிலையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் மறைந்திருக்கும் பாவ அடிமைத்தனங்களை கொண்டவர்கள், தாங்கள் ஆலயத்திற்கு செல்கின் றோம், ஜெபிக்கின்றோம். தானதர்மங்களை செய்கின்றோம் என்று எண் ணங் கொள்வதால், மனதிரும்புதலைக்குறித்த சிந்தையற்றவர்களாக மாறிவிடும் அபாயத்திற்குள்ளாகி விடுகின்றார்கள். எனவே அடிமைத்தன கட்டுக்கள் உங்களை மேற்கொள்ளாதபடிக்கு 'நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்க த்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு ஒருவரையொருவர் தாங்கி, ஒரு வர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.'

ஜெபம்:

அடிமைத்தன கட்டுக்களிலிருந்து என்னை விடுவித்த தேவனே, நான் மறுபடியும் என் அவயவங்களை அநீதிக்குரிய ஆயுதங்களாக ஒப்புக்கொடுக்காமல், உம்முடைய நீதியின் கிரியைகளை நடப்பிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:1-4

Category Tags: