புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 21, 2024)

விசுவாசியாதவர்கள் யார்?

2 கொரிந்தியர் 6:15

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?


பிதாவாகிய தேவன்தாமே நம்மை, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்திருக்கின்றார். அவர் யாரை அப்படி செய்திருக்கின்றார்? ஏழைகளையோ, ஐசுவரியவான்களையோ, சன்மார்கரையோ, துன்மார்கரையோ, மதப்பற்றுள்ளவர்களைளோ, நாஸ்திகர்களையோ, கல்விமான்களையோ, கல்லாதவர்களையோ, உயர்ந்தவர்களையோ, தாழ்ந்தவர்களையோ, அதிகாரிளையோ, குடிமக்கள்களையோ? பாரபட்சம் ஏதுமில்லாமல், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவர்கள் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை கொடுத்திருக்கின்றார். அப்படியானால் அவரை விசுவாசியாதவர்கள் யார்? அவரை விசுவாசியாதவர்கள் இன்னும் அவிசுவாசிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் இன்னும் உலக போக்கிலே வாழ்ந்து வருகின்றார்கள். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக் கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18 அப்படியானால் அவர்களை நாம் வெறுத்துத் தள்ளிவிட வேண்டுமோ? இல்லை, அவர்களும் நம்மைபோல இரட்சிப்படையும்படி அவர்கள் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்காக ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மேற்குறிப்பிட்டப்பட்ட எந்த குழுவிலே இருந்தாலும், இன்னும் அவிசுவாசிகளாக இருக்கின்றவர்கள். எபேசியர் 2:2 இன் படி, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றார்கள். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு கிறிஸ்து இயேசு வழியாக உண்டான இரட்சிப்பை பெற்றுக் கொண்ட ஒரு விசுவாசியானவன், இன்னமும் அவிசுவாசத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் ஐசுவரியவான்கள், கல்விமான்கள், உயர்ந்தவர்கள், அதிகாரிகள் போன்றவர்களுடனான ஐக்கியத்தை, தேவ ஆசீர்வாதமும், தன் வளர்ச்சியும் என்று மேன்மைப்படுத்துகின்றனாக இருந்தால், அந்த விசுவாசியின் நிலைமையை எப்படி கூறுவது? பிரியமானவர்களே, உங்கள் சொந்த புத்தியின்மேல் சார்ந்து, சுத்த மனசாட்சி யிலே சூடுண்டு போகப் பண்ணிவிடாதபடிக்கு, தேவ வசனத்தின்படி உங்கள் ஐக்கியம் பிதாவோடும், குமாரனோடும், இரட்சிக்கப்பட்ட சக பரிசுத்தவான்களோடும் இருப்பதாக.

ஜெபம்:

பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக என்னை அழைத்த தேவனே, நான் உம்மோடு ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லி, இருளிலே நடக்கின்றவர்களோடு ஜக்கியமாக இராதபடிக்கு, என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:6

Category Tags: