புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 13, 2024)

பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

மத்தேயு 7:20

ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


நாம் நம் ஆண்டவர் இயேசுவை சந்திக்கும் நாளிலே, நீங்கள் அவரை நோக்கி: உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்று கூறுவதை விரும்புவீர்களா? அல்லது அவர் உங்களை நோக்கி: பசயாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந் தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், என க்கு வஸ்திரங் கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்று கூறுவதை விரும்புவீர்களா? நிச்சயமாக நீங்கள், ஆண்டவர் இயேசு உங்களை நோக்கி கூறும் நல்ல சாட்சியையே விரும்புவீர்கள். அப்படியானால், தீர்க்கதரிசன வரம், பிசாசுகளை துரத்தும் வரம், அற்புதங்களை செய்யும் வரம் அவசியமற்றதா? ஆண்டவராகிய இயேசு வழியாக அல்லவோ நாம் அந்த வரங்களை பெற்றுக் கொண்டோம். ஆம், நாம் பற்பல வரங்களை ஈவாக பெற்றிருக்கின்றோம். நம் தேவனாகிய கர்த்தர்தாமே அதை பகர்ந்து நமக்கு கொடுத்திருக்கின்றார். அவைகள் யாவும், பிதாவாகிய தேவனின் சித்தத்தை நாம் இந்த பூமியிலே நடத்தி முடிக்கும்படிக்காகவே கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒருவன் அற்புதங்களை செய்யும் வரமுடையவனாக இருந்து, ஆண்டவர் இயேசுவின் நாமத்திலே பற்பல அற்புதங்களை மற்றவர்களுடைய வாழ்க்கையிலே நடப்பிக்கலாம். ஆனால், அவை யாவும் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காகவே செய்யப்பட வேண்டும். அவன் மற்றவர்களுடைய வாழ்விலே அற்புதங்களை செய்தும், தான் தன்னுடைய வாழ்விலே தன்னுடைய விருப்பத்தை செய்வானாக இருந்தால், அவன் கனியற்றவனாகவே காணப்படுவான். அவனுக்கிருக்கும் அந்த வரத்தினால் அவனுக்கு வரும் மகிமை இந்த உலகத்தோடு முடிந்து போய்விடும். எனவே நம்மிடத்தில் வரங்கள் இருக்கலாம், வேதாகம கல்லூரி பட்டங்கள் இருக்கலாம், அந்தஸ்து, ஆஸ்திகள், சமுக செல்வாக்குகள் இருக்கலாம். ஆனால், பிதாவாகிய தேவன் விரும்பும் கனிகள் நம்மில் உருவாகுவதற்கு, அவருடைய திருச்சித்தமானது நம்முடைய வாழ்விலே நிறைவேற நாம் இடம் கொடுக்க வேண்டும். 'வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,' என்று ஆண்டவர் இயேசு கூறும் வார்த்தைகளை கேட்கும்படிக்கு, தேவ சித்தம் நம்மில் நிறைவேற நாம் இடம் கொடுப்போமாக.

ஜெபம்:

பரலோக தேவனே, உலகம் உண்டானதுமுதல் எனக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கேதுவான கிரியைகளை நான் நடப்பிக்கும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலா 5:22-23