புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 08, 2024)

பரம பிதா பிழைப்பூட்டுகின்றார்

மத்தேயு 6:32

இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.


ஒரு கிராமமொன்றிலே, எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த குடியானவன், நாளாந்த ஊதியத்திலே தன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்து வந்தான். கிராமத்திலுள்ள பாடசாலையிலே தன் மகனானவன் படிப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளை செய்து கொடுத்தான். அவன் தன்னுடைய மகனானவனை மேற்படிப்பிற்காக பட்டணத்திற்கு அனுபவதற்கு நிர்வாகம் இல்லாதிருந்த போதும், மகனானவன் கிராமத்திலே வேலை செய்து பிழைப்பதற்கு தன்னால் முடிந்த ஒழுங்குகளை யாவையும் செய்து கொடுத்தான். இவ்வண்ணமாக எந்த ஒரு நல்ல தகப்பனானவனும் தன் பிள்ளைகள் இந்த உலகத்திலே வாழ தேவையானவற்றை அவர்களுக்கு கொடுக்கின்றார்கள். அக்காலத்திலே, தேவ ஜனங்கள் வனாந்திரத்தின் வழியாக, மோசேயினால், வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு நடத்திச் செல்லப்பட்டபோது, அவர்களை போஷpப்பதற்காக, பரம பிதாவாகிய தேவன்தாமே, மன்னாவை பொழிந்தார். மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள், உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவன வன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக் கொள்ளக்கடவன் என்றான். இன்று மனிதர்கள், நாளைய நாளு க்கு என்ன? அடுத்த கிழமை, அடுத்த மாதம், அடுத்த வருடம், எதிர்காலம் என்று பல காரியங்களை குறித்து கவலைடைகின்றார்கள். திட்டமிட்டு வாழ்வதில் தவறு இல்லை. ஆனால், அந்த திட்டம் தேவனுடைய வார்த்தைக்குட்டபட்டதாக இருக்காவிட்டால், அதனால் உண்டாகும் பலன் அற்பமே. சில விசுவாசிகளும்கூட இந்த உலகத்தின் போக்கில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையோடு, தங்கள் நிலைமையை ஒப்பிட்டு இவ்வண்ணமாக எதிர்காலத்தைக் குறித்து கவலையடையின்றார்கள். பிரியமானவர்களே, நம்முடைய பரம பிதா பிழைப்பூட்டுகின்றார்! அவர் நம்முடைய தேவைகளை அறிந்திருக்கின்றார். ஏற்ற வேளையில் யாவற்றையும் வாய்க்கப் பண்ணுகின்றார். இன்று அநேக ஏழைகள் ஒரு நேர உணவிற்கு தவிக்கின்ற வேளையிலே, தேவ பிள்ளைகள் எதிர் காலத்தை குறித்து கவலையடைவது சரியாகுமோ? ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

ஜெபம்:

என்னை வழிநடத்திச் செல்லும் பரம தந்தையே, இந்த உலகத்தின் போக்கை கண்டு குழப்பமடையாமல், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் உம்முடைய நீதியையும் தேட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:8-10