தியானம் (சித்திரை 07, 2024)
நம்முடைய பரம பிதா
1 பேதுரு 2:1
இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
நீங்கள் ஆராதிக்கின்ற பரம பிதா எப்படிப்பட்டவர் என்று உங்களிடம் யாராவது கேட்டால், நீங்கள் அவர்களுக்கு கூறும் மறுவுத்தரவு என்ன? சிலர், பயங்கரமானவர், பரிசுத்தமுள்ளவர், தண்டித்து நடத்துகின்றவர் என்று தங்கள் மனதிலே திகிலடைந்தவர்களாக பல கிரியைகள், ஒழுங்கு முறைகள், சட்டதிட்டங்கள் வழியாக தங்கள் பரிசுத்தத்தை நிலை நாட்ட முயற்சிக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், மற்றவர்களையும் திகிலடையச் செய்து, விசுவாசத்தையும் பரிசுத்தத்தையும் அவர்கள் வாழ்விலே திணித்து விட முயற்சிக்கின்றார்கள். வேறு சிலர், பரம பிதா, அன்புள்ளவர், கிருபை நிறைந்தவர், மனதுருக்கம் உள்ளவர் என்று கூறி, துணிகரமான அந்தகார கிரியைகளை செய்கின்றவர்களாக காணப்படுகின்றார்கள். இந்த இரண்டு சாராரும், பரம பிதாவின் குணாதிசயங்களை கூறுகின்றவர்களாக இருக்கின்ற போதிலும், அவரை அறிகின்ற அறிவிலே வள ராதவர்களாகையால், தவறான முறையிலே அவரை விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பரம பிதா பரிசுத்தமுள்ளவர். அவர் தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்ப தற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார். (எபேசியர் 1:4). பரம பிதா அன்புள்ளவர், ஆதலால், பாவம் செய்த ஆதாம் ஏவாளை நித்திய ஆக்கினைக்குள் விட்டுவிடாமலும், அவர்கள் வழியாக வந்த மனிதகுலமானது அந்தகார இருளின் கிரியைகளிலே வாழ்ந்து அழிந்து போகாதபடிக்கும் தம்முடைய குமா ரானாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்கின்றவன் துணிகரமான செயல்களிலே நிலைத்திருக்கமாட்டான். (யோவான் 3:16-18) அவர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். (எபிரெயர் 12:6). பரம பிதா, நாம் நிலையற்ற வர்கள் என்று அறிந்திருக்கின்றார், ஆதலால் நம்மை திக்கற்றோராய் விட்டுவிடாமல், நம்மோடு இருந்து நம்மை நடத்தும்படிக்கு, தம்முடைய ஆவியானவரை நமக்கு தந்திருக்கின்றார். அத்தோடு, அவர் சர்வ வல்ல மையுள்ளவரும், பயங்கரமுள்ளவருமாக இருந்தும், நாம் பயப்படுகிற தற்கு அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் கொடுத்திருக்கின்றார். எனவே நாம் சகல பாவங்களையும் ஒழித்துவிட்டு, பரம பிதாவை அறிகின்ற அறிவில் வளர்ந்து பெருகுவோமாக.
ஜெபம்:
பரலோக பிதாவே, நான் சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, உம் வார்த்தையின் வழியில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:26