புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2024)

கர்த்தருடைய வழியை அறிந்து கொள்ளுங்கள்

யோனா 3:5

அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்


மகா நகரமாகிய நினிவே, அசீரியா ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது. இவர்கள் புறஜாதி ஜனங்களாக இருந்தார்கள். (ஏசாயா 37:37, 2 இராஜக்கள் 19:36). அந்த மகா நகரமாகிய நினிவேயின் அக்கிரமம் கொடிதாயிருந்ததால், அந்த நகரத்தின் அழிவைக் குறித்து தேவனாகிய கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசி வழியாக எச்சிரிப்பின் செய்தியை அனுப்பினார். அந்த மகா நகரத்தார் உபவாசிக்கும்படி கூடினார்கள். உபவாசத்திற்கு முன்னதாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தார்கள். அதாவது, கர்த்தர் கூறியபடி நாற்பது நாளுக்குள் நினிவே கவிழ்க்கப்படும் என்ற தீர்க்கதரிசன வார்த்தையை விசுவாசித்தார்கள். தங்கள் மனத்தாழ்மையை காண்பிக்கும் பொருட்டு, ராஜாவானவன் தன் ராஜ வஸ்திரத்தை கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். நினிவேயின் ஜனங்களை நோக்கி: நீங்கள் 'தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்' என்று கட்டளையை பிறப்பி த்தான். 'அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்க ளென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்க ளுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.' பிரியமானவர்களே, நினிவே பட்டணத்தார், தேவனாகிய கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்து, தங்களை தாழ்த்தி, பொல்லாத வழிகளைவிட்டு திரும்பியதால், அவர்களுடைய உபவாசம் கர்த்தருக்கு பிரியமாக இருந்தது. இன்று சிலர், உபவாச நாள் அவசியமில்லை என்று உபதேசிக்கின்றார்கள். பரிசுத்தமான உபவாச நாளை நியமிப்பது நல்லது. அதற்கு முன்னதாக, நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தால், நம்மை அவருடைய சமுகத்திலே தாழ்த்தி ஒப்புக்கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு விசுவாசியானவன், தன் உடன் சகோதரன் செய்த குற்றத்தை மன்னிக்க அவனுக்கு மனதில்லை. கசப்பை மனதிலே வைத்து, திரும்பி கொடுக்க ஒரு சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இது அவன் மனதிலே மறைந்திருக்கும் பொல்லாத வழி. பிரதானமாக, அவன் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தால், உபவாசிக்க முன்பதாக, தன் உடன் சகோதரனை மன்னிக்க தீர்மானம் செய்ய வேண்டும். கர்த்தருடைய சித்தம் தன் வாழ்வில் நிறைவேற தன்னை ஒப்புக் கொடுக்கும் போது, அந்த உபவாசம் அவனுக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்கும்.

ஜெபம்:

இரக்கமுள்ள பரலோக தேவனே, நான் உம்மை அறிக்கின்ற அறிவில் வளரும்படிக்கு உம் வார்த்தைக்கு கீழ்படிந்து ஒப்புக் கொடுக்க, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவேல் 2:12