புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2024)

உபவாசத்தின் நோக்கம் என்ன?

1 சாமுவேல் 15:22

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?


பாடசாலைக்கு சென்று வந்த தங்கள் மகனானவனுக்கு, அவனுடைய பெற்றோர், குறிப்பிட்ட ஒரு காரியத்தைக் குறித்து, சில முறை அவனுக்கு ஆலோசனையையும், எச்சரிப்பையும் வழங்கி வந்தார்கள். சில நாட்களு க்கு பின்பு, பெற்றோர் எதை செய்ய வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்களோ, அந்த காரியத்தை அவன் செய்ததால், பாடசாலையிலும் வீட்டிலும் தன்னை பிரச்சனைக்குட்படுத்திக் கொண்டான். மாலையிலே வீடு திரும்பிய அந்த மகனானவன், பெற் றோரிடம் தன் தவறை அறிக்கை செய்து மன்னிப்பு கேட்டுக் கொண்டான். அன் றிரவு உணவேதும் உண்ணாமல், துக்கத்தோடு படுக்கைக்கு சென்றான். அவனுடைய நிலைமையை அறிந்த பெற் றோராவர்கள், அவனை ஆதரவுடன் அணைத்து, இனிமேல் நாங்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நட என்று கூறி, அவன் விரும்பிய உணவு வகைகளை சமைத்துக் கொடுத்தார்கள். காரணம் என்ன? அவன் சாப்பிடாமல் நித்திரைக்கு சென்றதாலோ? அல்லது அவன் தான் செய்த காரியம் தவறானது என்று உணர்ந்து மனம் வருந்தியாதாலோ? அவன் தன் தவறை உணர்ந்த மனம் வருந்தியதாலேயே அவன் பெற்றோர் அவனுடைய வளர்ச்சியைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார்கள். ஆண்டுகள் கடந்து சென்று அந்த மகனானவன் வாலிப பிராயத்தை அடைந்த போது, தன் நண்பர்களுடன் சில நாட்களுக்கு வெளியூருக்கு செல்ல அனுமதி கேட்டுக் கொண்டான். பெற்றோர், அவனோடு கூடி செல்பவர்களையும், அவர்கள் செல்ல இருக்கும் இடத்தையும் குறித்து நன்கு அறிந்திருந்ததால், அவனுக்கு அனுமதியை வழங்க மறுத்தார்கள். அவனோ, பெற்றோரின் வார்த்தைக்கு கீழ்படிய மனதில்லாதவனாய், ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து விட்டான். அதனால் தன் பெற்றோர் மனம் மாறுவார்கள் அல்லது வழிக்கு வருவார்கள் என்று மிகவும் தவறான எண்ணங் கொண்டான். பிரியமானவர்களே, உங்கள் உபவாசங்கள் கர்த்தருக்கு பிரியமாக இருக்கும்படிக்கு, உங்ள கர்த்தருடைய சமுகத்திலே தாழ்த்துங்கள். அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து கர்த்தருடைய வேளைக்கு காத்திருக்கும்படி ஒப்புக் கொடுங்கள். நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை கர்த்தர் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார். உங்கள் உபவாசங்கள் நீங்கள் விரும்பிய முடிவை கண்டடையும் இருக்காமல், கர்த்தருடைய சித்தத்திற்கு உட்பட்டதாக இருப்பதாக.

ஜெபம்:

இருதங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, நான் வழக்குக்கும் வாதுக்கும் நான் விரும்பியவைகளை நடப்பிப்பதற்கும் உபவாசியால், உம்முடைய சித்தத்தின்படி வாழ கீழ்படிவுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 58:1-11