புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 27, 2024)

தேவ சமுகத்திலே விடுதலை உண்டு

லூக்கா 18:14

தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.


இரண்டு மனிதர்கள் ஜெபம் செய்யும்படி தேவ ஆலயத்திற்கு சென்றார்கள். ஒருவனோ தன் மதக்கிரியைகளை ஒழுங்காக நடப்பிக்கின்றவனாக இருந்தபோதும், சுயநீதியினால் உண்டான பெருமை அவனுக்குள் இருந்தது. அதனால் அவன் தன்னைத்தானே நீதிமான்னென்று நம்பி, ஜெபம் செய்யச் சென்ற மற்றய மனிதனின் பாவ வாழ்க்கையில் மனதிலே தியானம் செய்து, தேவ சமுகத்திலே அவனை அற்பமாயெண்ணி, தன், மனதிலே ஜெபம் செய்தான். தன்னுடைய இருதயத்திலிருந்த பெருமையையும் அகங்காரத்தையும் தேவனாகிய கர்த்தர் அறிந்திருக்கின்றார் என்பதையும் பெருமையுள்வனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்பதையும் அவன் உணராதிருந்தான். மற்றவனோ, தான் பாவி என்பதை உணர்ந்து, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அதனால் அவன் தேவ கிருபை யை பெற்று, நீதிமானாக்க வீடுதிரும்பினான். தன்னை நீதிமான் என்று நம்பின மனுஷனோ, தன் பாவங்களோடு வீட்டுக்குத் திரும்பிப்போனான். பிரியமானவர்களே, 'தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்' என்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ;டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.' எனவே நாம் எத்தகைய நற்கிரியைகளை எவ்வளவு அதிகமாக செய்து வந்தாலும், நாம்; கர்த்தருடைய சமுகத்திலே அனுதினமும் நம்மைத் தாழ்த்தி அவருடைய சமுகத்திலே நம்முடைய உள்ளான மனிதனுடைய யோசனைகளை ஆராய்ந்து அறிய வேண்டும். நற்கிரியைகளை நடப்பிக்க, கர்த்தரே நம்மில் செய்கையையும் விரும்பத்தையும் ஏற்படுத்துகின்றார். எனவே இரவும் பகலும் தேவ வார்த்தைகள் நம்முடைய தியானமாக இருக்க வேண் டும். தேவசமுகத்திலே நாம் எப்போதும் தாழ்மையுள்ளவர்களாக காணப்பட வேண்டும். நாளுக்கு நாள் உள்ளான மனிதனானது கிறிஸ்துவின் சாயலிலே வளர்ந்து பெருக வேண்டும்.

ஜெபம்:

என் உள்ளந்திரியங்களை அறிந்த தேவனே, உம்முடைய சமுகத்திலே நான் தாழ்மையுள்ள இருதயத்தோடு சேரவும், சுயநீதி யானது என்னில் தலைதூக்காதபடிக்கு, நீர் எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 5:8

Category Tags: