தியானம் (மாசி 24, 2024)
குறுக்கு வழிகள்...
நீதிமொழிகள் 4:26
உன் கால்நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
ஒரு தகப்பனானவர், தன் மகனானவனை கூப்பிட்டு, ஊரிலுள்ள சந்தைக்கு சென்று சில பொருட்களை வாங்கி வருமாறு அவனிடம் கூறினார். மகனானவன் சந்தைக்கு செல்ல ஆயத்தமாகும் போது, அவன் தகப்பனானவர் அவனை நோக்கி: இந்நாட்களிலே, நீ வயல்வெளிப் பக்கமாக இருக்கும் குறுக்கு பாதையிலே செல்லாமல், சந்தைக்கு நாம் செல்லும் வழமையான வீதி வழியாக செல்ல வேண்டும் என்று அவனுக்கு திட்டமாக அறிவுரை கூறியிருந்தார். அவனோ, அப்பா எப்பொழு தும், காரியங்களைக் குறித்து எண்ண வேண்டியதிற்கு அதிகமாக யோசிப்பவர், நான் வயல்வெளியிலு ள்ள ஒற்றையடிப் பாதை வழியாக சீக்கிரமாக சென்று வருவேன் என்று குறுக்கு வழியாக புறப்பட்டான். சற்று தூரம் சென்ற பின்பு, அந்த வழியிலே வன விலங்குகளினால், சில மனிதர்கள் தாக்கபட்டதினால், அந்த ஒற்றையடிப்பாதை தற்காலிக மாக அடைக்கப்பட்டிருப்தை கண்டான். இவ்வளவு தூரம் வந்துவிட் டேன் என்று திரும்பவும் வழமையாக செல்லும் வழிக்கு செல்வது அதிகநேரமெடுக்கும் என்று, வயல் வழியாக செல்வோம் என்று தீர்மா னித்து அதனூடாக சென்று கொண்டிருந்தான், இன்னும் சற்று தூரம் அவ்வழியாக அவன் சென்றபின்பு, கடந்த கிழமை அந்த ஊரைத்தாக் கிய சூறாவளியினாலே, வயல்வெளியின் மற்றய பக்கத்தில் கடக்கக் கூடாதபடிக்கு பெருவெள்ளம் இருப்பதைக் கண்டு கொண்டான். அவன் மனம் அவனை திரும்பிப்போ என்று உறுத்திய போதும், அவன் திரும் பிப் போகாமல், அவன் சற்று தரித்து நின்று வேறு ஏதாவது குறுக்கு வழி இருக்கின்றதா என்று பார்த்தான். நித்திய ஜீவனுக்கென்று அழை ப்பை பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, இன்றைய நாட்க ளிலே சில விசுவாசிகளுடைய வாழ்க்கையும் இவ்வண்ணமாகவே போய் விடுகின்றது. தேவனுடைய சத்திய வார்த்தைகள் உபதேசிக்கப்படும் போது, மேய்ப்பரானவர் கூறுவதைப் போல வாழ்ந்தால், இந்த நவீன உலகத் திலே வாழமுடியாது என்று தங்களுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டு, இந்த உலகத்திலுள்ள குறுக்கு வழிகளை நாடிச் செல்கின்றார்கள். அந்த வழியிலே பிரச்சனைகள் வந்தாலும், தங்கள் தவறுகளை ஏற்றுக் கொண்டு, நேரிய வழிக்கு திரும்பாதபடிக்கு தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொள்கின்றார்கள். உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது. உன் கால்ந டையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே. உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.
ஜெபம்:
நல் ஆலோசனைகள் தரும் பரம தகப்பனே, உம்முடைய ஆலோ சனைகளை நான் அசட்டை பண்ணாமல், நீர் காட்டும் நேரிய வழியிலே செல்ல எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 55:8-9