புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 22, 2024)

'கிருபையின் காலம்'

புலம்பல் 3:40

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.


கொள்ளை நோயானது உலகத்தை கலகங்கப் பண்ணிக்கொண்டிருந்த நாட்களானது முடிவடையும் போது, குறிப்பிட்ட பட்டணத்திலுள்ள பல மக்களில் பலருடைய சாரதி அனுமதிப் பத்திரம் காலவதியாகிவிட்டதால், யாவரும் அதை புதுபிக்க வேண்டியதாக இருந்தது. அதனால், அந்த நாட்டின் அரச அதிபர்கள், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப் பிப்பதற்கு அநேக மாதங்கள் கூட்டிக் கொடுத்தார்கள். அந்த காலவறையறை முடிவடையும் தறுவாயில், இன்னும் பலர் தங்கள் சாரதி அனுமதிப்பத்திர ங்களை பல காரணங்களுக்காக புதுப் பிக்காமல் இருந்ததால், அவர்களின் காரணங்களை கேட்டு அவர்களுக்கு அபராதம் எதையும் விதிக்காமல், பார பட்சமில்லாமல் யாவருக்கும் 'கிருபை காலம்' (Grace Period) என்று இன்னும் சில மாத ங்களை கூட்டிக் கொடுத்தார்கள். அந்த காலம் முடிவடை ந்த பின்னர், பொலிஸ் அதிகாரிகள், சாராதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காத மனிதர்களை இடைமறித்து, அவர்களுக்கு அபராதத்தை வழங்கினார்கள். பிரியமானவர்களே, இந்த பூமியிலே எல்லா காலங்க ளுக்கும் ஒரு முடிவு உண்டு. நாம் இப்போது கிருபையின் காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உன்னை அழைத்த தேவனாகிய கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் வாக்கு மாறாதவர்! அவர் உன்னை பாதி வழியில் கைவிடமாட்டார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலை தோறும் புதியவைகள்;. அவர் உனக்கென்று ஆயத்த ப்படுத்தியிருக்கும் தம்முடைய நித்திய வீட்டிற்கு நீ வந்தடைய வேண்டும் என்று அவர் உன்மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார் என்பதைக் குறித்து நீ உணர்ந்தவனாக வாழ வேண்டும். இன்றைய நாட்களிலே சில விசுவாசக்கூட்டத்தார் கிருபையின் நாட்களை தேவ சாய லிலே வளர்வதற்கு பிரயோஜனப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, தேவ கிருபையை குறித்து விவாதிப்பதிலும், தங்கள் வழிகளை நியாயப்படுத்துவதிலும் அதிக நேரங்களை விரயப்படுத்திக் கொள்கின்றார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, சற்று உங்கள் வாழ்க்கையை தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே நீங்களே ஆராய்ந்து பாருங்கள். 'நான் போதிக்கப்படகூடியவனாக இருக்கின்றேனா? என்னுடைய செவிகள் தேவ வார்த்தை கேட்பதற்கு திறந்திருக்கின்றதா? என்னுடைய இருதயம் தேவனுடைய கடிந்து கொள்ளுதலுக்கு உணர்வுள்ளதாக இருக்கின்றதா?' போன்ற கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டு, ஆராய்ந்தறி தந்து வேதனை யுண்டாக்கும் வழிகளை விட்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்.

ஜெபம்:

என்மேல் உம் கிருபையை பொழிகின்ற தேவனே, உம்முடைய கிருபையின் நாட்களை நான் ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:16