புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2024)

ஏன் பலனை காணவில்லை?

லூக்கா 21:34

உங்கள் இருதயங்கள் பெருந் திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.


பணம் அல்ல, பண ஆசையே கண்ணி என்று கூறி, சிலர் செல்வப் பெருக்கை வாஞ்சையோடு நாடித் தேடுகின்றார்கள். வெறிக்கக் குடிப்பதே தவறு, கொஞ்சமாக குடித்தால் என்ன? என்ற விவாதத்தை எழுப்பும் தொனிகள். திரைப்படங்களை பார்த்தாலும் நன்மையை எடுத்து விட்டு, தீமையை விட்டுவிட வேண்டும் என்று நெறிகெட்ட திரைப்படங்களை ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கும் குழுக்கள். வேறு சிலர், ஊரோடு ஒத்தோடு, உலகத்தை விட்டு வாழ முடியாது, என்று அந்நிய காரியங்களில் துணிகரமாக பங்கேற்கின்றார்கள். இவர்கள் இருளுக்கும் ஒளிக்கும் ஐக்கியத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் பரந்த மனமுள்ள மனிதர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட போக்கையுடையவர்கள், தாங்கள் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை தங் கள் துர்குணத்திற்கு மூடலாக உபயோகித்து, சத்தியத்தின் வழியில் நடப்பவர்களோடு வாக்குவாதங்களை ஏற்படுத்துகின்றார்கள். தங்கள் தெரிவுகளின் விளைவாக, தங்கள் இருதயத்திலே உலக ஆசைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், குடிகொள்ள இடங்கொடுக்கின்றார்கள். இப்படிப்பட்ட இருதயதயமுடையவர்களே முட்செடியுள்ள நிலத்திற்கு ஒப்பாயிருக்கின்றார்கள். இவர்கள் தேவனுடைய வார்த்தையாகிய விதை வளர்ந்து முளைப்பதற்கு இடங்கொடுத்தாலும், இருதயத்திலே படர்ந்து வளர்ந்திருக்கும் முட்செடிகளை அகற்றுவதற்கு இணங்காதவர்களாகத த்துவ பேச்சுள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். அதனால், தேவனுடைய வார்த்தையை கேட்கின்றார்கள், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால் பலனற்றுப் போய்வி டுகின்றார்கள். ஒருவேளை இவர்கள் 'இரட்சிக்கப்பட்டவர்கள்' என்ற பெயரை தங்களுக்கு சூடிக்கொண்டாலும், இரட்சண்யத்தின் சந்தோஷம் இல்லாமலும், தேவவார்த்தையினால் உண்டாகும் மேன்மையான பலனை வாழ்வில் காணமுடியாமல், பின்மாற்றமான வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுத்து விடுகின்றார்கள். பிரியமானவர்களே, பல ஆண்டுகள் பிரயாசப்பட்டும் அதன் பலனை காணமுடியாமல் இருக்கின்றதா? தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் உங்கள் இருதயத்தை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். கிருபையின் நாட்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி என்னை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்தோடும், மாம்ச இச்சைகளோடும் சமரசம் செய்யும் வாழ்க்கை வாழாமால் உம் வார்த்தையின்படி வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2