புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 06, 2024)

பிரகாசிப்பிக்கின்ற மெய்யான ஒளி

யோவான் 1:9

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.


ஒரு கிராமத்தின் சந்தை கூடும் இடத்திலே, இரவு நேரங்களிலே, அவ் வழியால் சென்று வரும் சில விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் தலைதூக்குவதற்கு முன்னராக, அந்த கிராமத்தின் மூப்பர்கள் கூடி, மக்களின் பாதுகாப்பை முன் னிட்டு, கிராமத்தின் மையப் பகுதியிலுள்ள சனசமூக நிலையத்தில் விழிப்புக் குழுவொன்றை ஏற்படுத்தி, தெருவிலே மின்சார கம்பங்களை நட்டு, அதில் பிரகாசமாக ஒளிவீசும் மின்குமிழ்களை பொருத்தினார்கள். கிராத்திலுள்ள பொது மக்களில் பெரும்பான்மையானோர் அதை வரவேற்றார்கள். ஆனால், ஒரு சிலரோ, இத்தனை பணத்தை விரயம் செய்து, இரவு முழுவதும் மின்சாரத்தை வீணாக்க வேண்டும் என்று முறுமுறுத்தார்கள். ஏனெனில் இருளிலே கொள்ளையடிப் பதில் அவர்களும் சம்பந்தமுள்ளவர்களாக இருந்தார்கள். பிரியமானவர்களே, இவ்வண்ணமாக, ஆவிக்குரிய வாழ்க்கையிலும், இருளின் அந்தகாரத்திற்குட்பட்டவர்களி டத்தில் வெளிச்சம் இல்லாதிருப்பதினால் அவர்கள் இடறுதலுக்கேதுவான கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். அவர்கள் தாங்கள் இடறுவதுமட்டுமல்லாமல், மற்றவர்களையும் இடறப்பண்ணுகின்றார்கள். மேலும் அவர்களின் கிரியைகள் பொல்லாங்கானதாக இருப்பதினால், தங்கள் கிரியைகளை வெளிப்படுத்தும், மெய்யான ஒளியை பகைக்கின்றார்கள். சட்டமில்லாத ஊரிலே குற்றம் என்று ஏதும் இல்லை என்ற பிரகாரமாக, மெய்யான ஒளியானது, இந்த உலகத்தில் பிரகாசிக்காதிருந்தால், பொல்லாத கிரியைகள் என்று ஏதும் இல்லை என்று எண்ணிக் கொள்கின்றார்கள். 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அவரே நம் வாழ்வின் மெய்யான ஒளியாக இருக்கின்றார். நம் இருதயத்தை ஒளியேற்றும் அணையாத தீபமாக இருக்கின்றார். உண்மையின் விளக்கு எரிந்தும், அதன் ஒளியின் அருகில் வாழ விருப்பமில்லாதவர்களின்; மனக்கண்கள் குருடாகி இருப்பதினால் அவர்கள் மெய்யான ஒளியாகிய ஆண்டவர் இயேசுவை பகைக்கின்றார்கள். ஏனெனில் 'பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளி யைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.' மெய்யான ஒளியை காண்பிக்கும் வேத வார்த்தைகளை நீங்கள் எவ்வளவாய் நேசிக்கின்றீர்கள்?

ஜெபம்:

பகலிலே நடக்கின்றவன் இடறுவதில்லை என்று கூறிய தேவனே, நான் என் மனதை பிரகாசிப்பிக்கும் பேரொளியாகிய உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 3:19-21