புதிய நாளுக்குள்..

தியானம் (தை 25, 2024)

வாழ்வடையும் வழி

நீதிமொழிகள் 28:13

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


ஆண்டவராகிய இயேசு உயிர்தெழுந்தார் என்ற செய்தியை, அந்நாளிலிருந்த பிரதான ஆசாரியன் அறிந்த போது, மூப்பர்களோடு, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:'நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்தி ரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். இது தேசாதிபதிக்குக் கேள்வியா னால், நாங்கள் அவரைச் சம்மதப்ப டுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள்.' (மத்தேயு 28:12-15). இப்படிப் பட்ட ஆலோசனையை குறித்து என்ன கூறமுடியும்? அது நல் ஆலோசனையல்ல, தங்கள் குற்றங்களை மறைத்து, தங்கள் கொள் கைகளை உறுதிப்படுத்தும்படிக்கு, தங்களுக்கு கேடுண் டாக்கும் பொய் சாட்சிகளை ஏற்படுத்தி, துர்ஆலோசனை பிணைக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். அதனால், அவர்களுடைய வஞ்சகத்தினால், தேவ ஆலோசனை அபத்தமாகிற்றோ? இல்லை! அவர்களுடைய மதியீனத்தினால், தேவ காரியங்கள் தடைபட்டுப் போயிற்றோ? ஒரு போதும் இல்லை. தேவனாகிய கர்த்தர் சகலத்தையும் செய்ய வல்லவர்;. அவர்; செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது. அன்று ஆண்டவர் இயேசுவை எதிர்த்து நின்றவர்கள் பிணைத்த அந்தப் பொய்யான பேச்சு இந்நாள்வரைக்கும் ஒரு சிலர் மத்தியிலே பிரசித்தமாயிருக்கிறது. ஆனால், ஆண்டவர் இயேசுவை அறிந்திருக்கின்ற நாம், நம்முடைய வீட்டிலும், சபையிலே சகோதரர் மத்தியிலும் நம்முயை குற்றங்களை மறைப்பதற்கு ஆதரவுளை தேடாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்று விசுவாசிகள் மத்தியிலே, 'நாங்கள் உங்களை சேர்ந்தவர்களாக இருப்போம், அது போல நீங்களும், எங்க ளுடைய குறைகளை நியாயப்படுத்துவதற்கு ஆதராவயிருங்கள்' என்று சிலர் வாழ்ந்து கொள்கின்றார்கள். அதனால், அவர்கள் சில மனிதர்கள் முன்னிலையிலே நீதிமான்களைப் போல காணப்படலாம். இவர்கள் தங்கள் குறைகளை அறிக்கை பண்ணிவிட்டுவிட மனதில்லாததால், தங்கள் குறைகளை உணர்த்த நியமிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்த்துவிடுகின்றார்கள். நாமோ அப்படியாக வாழாமல், இரக்கத்தை பெறும்படி மனந்திரும்பும் இருதயமுள்ளவர்களாக வாழ்வோமாக.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, நான் சுயநீதியுள்ளவனாக வாழாமல், உம்முடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு, மனம்திரும்பி, நீர் விரும்பும் நீதிமானாக வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 6:16-19