புதிய நாளுக்குள்..

தியானம் (தை 07, 2024)

இடமாற்றமும் மனமாற்றமும்

யாக்கோபு 1:25

சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப் பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மற க்கிறவனாயிராமல், அதற்கே ற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த இரண்டு நண்பர்கள், அவர்கள் வசித்து வந்த கிராமத்திலுள்ள பாடசாலையிலே படித்து வந்தார்கள். சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர்களின் ஒருவனுடைய பெற்றோர், சில காரணங்களுக்காக அவனை பட்டணத்திலுள்ள பிரபல்யமான பாட சாலையொன்றிலே சேர்த்து விட்டார்கள். குறித்த ஆண்டிலே, நடை பெற்ற பொதுவான இறுதிப் பரீட்சையிலே இருவரும் விசேஷட சித்திகளுடன் தேர்ச்சி பெற்றார்கள். ஏனெனில், அவ்விருவரும் எங்கிருந்தாலும், பாடசாலையிலே ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும்போது பாடங்களை நன்றாக கவனித்து, மாலை வேளையிலும், வார இறுதி நாட்களிலும், கற்ற பாடங்களை மீள்ஆய்வு செய்து அனுதினமும் ஊக் கமாக கற்று வந்தார்கள். அதனால், இருவரும் பட்டப்படிப்புக்காக ஓரே பல்கலைக்கழகத்திலே சேர்ந்து கொண்டார்கள். நிலையான நகரமாகிய பரலோகத்தை நாடித் தேடும்படி அழைப்பை பெற்ற சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆராதித்து வரும் சபை பட்டணத்திலே உள்ள பாடசாலையைப் போல பிரபல்யமானதாக இருக்கலாம் அல்லது யாரும் அறியாத குக்கிராமத்திலே கூட இருக்கலாம். ஆனால், ஒரு விசுவாசியானவன், அவன் எங்கிருந்தாலும், ஆண்டவராகிய இயேசுவிலும், அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருந்து, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன் வாழ்விலே நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்யாதவன் அவன் பட்டணத்தில் இருந்தாலும், குக்கிராமத்தில் இருந்தாலும் அவனுக்கு அதனால் வரும் பலன் இந்த உலகத்தோடு அழிந்து போய் விடும். இன்று பல காரணங்களுக்காக விசுவாசிகள் தாங்கள் சென்று ஆராதிதது வரும் ஆவிக்குரிய சபைகளை மாற்றிக் கொள்கின்றார்கள். எது சரி, எது பிழை என்பதை விமர்சிப்பது இந்த தியானத்தின் நோக்கமல்ல. ஆனால், அப்படியாக இடங்களை மாற்றிக் கொண்டவர்கள், தொடர்ந்தும் மனமாற்றமில்லாமலாதவர்களாக வாழ்ந்து வந்தால் அதனால் அவர்களுக்கு பலன் என்ன? எனவே எந்த சூழ்நிலையிலும், திருவசனத்தைக் கேட்பதுடன் விட்டுவிடாமல், நாம் அதின்படி செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, எல்லா சூழ்நிலைகளிலும் நான் உம்முடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் உம்முடைய வேதத்திலே தியானமாயிருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:5