புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 31, 2023)

அறியாததும் எட்டாததுமான காரியங்கள்

எரேமியா 33:3

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.


ஒரு வாலிபனானவன், தன் தகப்பனை நோக்கி: நீங்கள் என் வாழ்வில் அப்படி என்ன காரியங்களை செய்தீர்கள் என்று தன் விரக்தியான நிலையை வெளிப்படுத்தி கொண்டான். வயது முதிர்ந்த தகப்பனானவரோ, தன் மகனானவனின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, தன் மகன்மேல் கோபம் கொள்ளாமலும், எதையும் பேசாமலும், காலங்களும், நேரங்களும் பதில் கூறும் என்று தன் மனதிலே நிர்ணயம் செய்து கொண்டு மௌனமாக இருந்து விட்டார். அந்த வாலிபனுடைய தாயானவள் தன் கணவனை நோக்கி: நீங்கள் ஏன் அவனை கடிந்து கொள்ளாமலும், பதில் ஏதும் கூறாமலும், அவன் போக்கிற்கு விட்டுவிட்டீர்கள் என்று கேட்டார். அதற்கு கணவனானவன்: அவன் அறிந்தது கொஞ்சம், அவன் அறியாததும், அவன் அறிவுக்கு எட்டாதுமான காரியங்களோ அநேகம். அவன் தன் அறியாமையிலே விரக்தியடைந்திருக்கின்றான். குறித்த காலத்திலே யாவற்றையும் அறிந்து கொள்வான் என்று பதிலளித்தார். பிரியமானவர்களே, இந்த வருடத்தின் கடைசி நாளிலே வந்திருக்கும் நாமும், அறிந்தவைகள் கொஞ்சம். அறியாதவைகளோ ஏராளமானதாய் இருக்கின்றது. நம்மீது அன்புகூர்ந்த நம்முடைய பரம பிதாவானவர், ஒரு நன்மையையும் நமக்கு தடை செய்வதில்லை. நாம் கேட்டு, பெற்றுக் கொண்டு நன்றி கூறும் காரியங்கள் ஒரு சில உண்டு. ஆனால் நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை பிதவாகிய தேவன்தாமே நடப்பித்திருக்கின்றார். செய்வதற்கு அப்படியென்ன பெரிய காரியம் உண்டு என்று கேட்கத் தோன்றுகின்றதா? அந்த இளவயது டைய வாலிபனைப் போல, நம்முடைய அறிவுக்கு எட்டாதவைகள் அநேகம் உண்டு. இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். நம்மு டைய நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, நம் தேவைகளை எல்லாம் அவர் அறிந்திருக்கின்றார். அன்று தம்முடைய ஜனங்களை, ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, அவர்கள் நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், தேவனாகிய கர்த்தர் அவர்களை சுமந்து கொண்டுவந்தார். அதுபோல இன்றும் இந்நாள்வரையும் நம்மை சுமந்து வந்திருக்கின்றார். எனவே உற்சாகமுள்ள மனதோடு தேவனுக்கு நன்றியை செலுத்துங்கள். அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். ஆமேன்!

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - உபாகமம் 1:31