தியானம் (மார்கழி 11, 2023)
புதிதும் ஜீவனுமான வாழ்க்கை
எபிரெயர் 10:19
புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
ஒரு தகப்பனானவர், தன் இளைமைக் காலத்தில் தான் செய்த வீர சாகச செயல்களைக் குறித்து அவ்வப்போது தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. ஒரு நாள், தகப் பனானவர் அப்படியாக தன் இளமைக் காலத்தைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவருடைய சின்ன மகளானவள், அவரை நோக்கி: 'அப்பா, அந்த செயல்களை இப்போது எங்களுக்கு செய்து காட்டுங்களேன்' என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு தகப்பனானவர், அது அந்தக் காலம் மகளே. இளமைக் காலத்தின் பெலன் எனக்கு இப் போது இல்லை. காலம் கடந்து போய்விட்டது என்று கூறிக் கொண்டார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து, இயேசுவோடு வாழும் வாழ்க்கையை குறித்து இன்று தியானம் செய்வோம். நம்முடைய வாழ்க்கையின் பல செயற்பாடுகள், வயதோடு மாறிக்கொண்டு போவது உண்மை. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு என்பதை குறித்து எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மனிதர்களுடைய சரீரம் வயதோடு பெலவீனமடைந்து கொண்டு செல்கின்றது. ஆனால், இயேசுவோடு வாழும் வாழ்க்கைக்கு ஒரு கால எல்லையை நாம் குறித்துவிடக் கூடாது. அவரோடு வாழும் வாழ்க்கையானது கடந்த காலத்திற்கு அல்லது இறந்த காலத்திற்ரியதல்ல. அந்த வாழ்க்கை பழைமையடைந்து போவதில்லை. அது நாளுக்கு நாள் புதிப்பிக்கப்படுகின்ற வாழ்க்கை. நான் அன்று இயேசுவுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தேன், இன்று வயதாகிவிட்டது எனவே அவருக்கு பிரியமான வாழ்க்கை வாழ முடியவில்லை என்ற எண்ணம்கூட மனதிலே தோன்றுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. 'கர்த்தர் நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார். கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.' எனவே நீங்கள் எந்த வயதையுடையவர்களாக இருந்தாலும், மாம் சமான பழைய மனுஷனுக்குரிய சுபாவ இச்சைகளை களைந்துவிட்டு, உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் இன்னும் அதிகமாக பெலனடைய வேண்டும். சில வேளைகளிலே, வாழ்க்கையிலே ஏற்படும் சூழ்நிலைகள் சில மனச்சோர்வுகளை உண்டு பண்ணலாம். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடி னாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
ஜெபம்:
சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகின்ற தேவனே, நான் எக்கால த்திலும் உறுதியாய் உம்மில் தரித்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ஏசாயா 40:29