புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 01, 2023)

நீங்கள் தேவ பக்தியுடையவர்களா?

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


தேவ பக்தியானது எதனால் அளவிடப்படும்? மனிதர்கள் பல சடங்காச்சாரங்களை செய்து வருகின்றார்கள். தாங்கள் கற்றுக் கொண்ட கொள்கைகள், கோட்பாடுகள், மற்றும் உபதேசங்களை உறுதியாய் நம்புகின்றார்கள். இவைகளைச்; செய்கின்றவர்கள் இந்த உலகிலே மதப்பற்றுள்ளவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இவைகளை மனிதர்கள் செய்வதினாலே, இந்த உலக மனிதர்களினால், அவர்கள் தேவபக்தியுள்ளவர்கள் என்ற பெயர் பெறுகின்றார்கள். அதனால் மனிதனுக்கு என்ன இலாபம்? தேவனுடைய பார்வையிலே தேவபக்கியுள்ளவன் யார் என்பதைக் குறித்து இன்று தியானிப்போம். உண்மையான தேவபக்தியுள்ள விசுவாசியானவன், தேவனை ஆராதிக்கும்படி தேவ ஆலயத்திற்கு செல்கின்றான். அதனால், தேவ ஆலயத்திற்கு செல்பவர்கள் எல்லோரும் தேவ பக்தியுள்ளவர்களா? ஒரு மனிதனானவன், தேவனுடைய நியமங்களை சடங்காரச்சாரமாக செய்து வருவதினால், அவனுக்கு பலன் என்ன? இதை எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? நீங்கள் மதப்பற்றுள்ளவர்களாக இருக்கும்படி ஆரம்பித்த நாளிலிருந்து, உங்கள் வாழ்விலே உண்டான மாற்றங்கள் என்ன? உள்ளான மனிதனிலே மாற்றங்கள் உண்டா? உள்ளான மனிதனிலே உண்டான மாற்றங்கள் வெளியான நற்கனிகளைக் கொடுக்கின்றதா? உங்களுக்குள் உண்டாயிருக்கும் தேவ பக்தி யானது, உங்களில் பெருமையை உண்டாக்கியிருக்கின்றதா? அல்லது மனத்தாழ்மையையும், சாந்தத்தையும் உண்டாக்கியிருக்கின்றதா? சிலர் தங்களை தேவ பக்தியுள்ளவர்கள் என்று பெருமைபாராட்டிக் கொள்கின்றார்கள். ஆனால், அந்த பக்தியை தேவனாகிய கர்த்தர் அங்கிகரிக்கவில்லையென்றால், அது அவனுடைய வாழ்விலே மனிதர்களுடைய அங்கிகாரத்தை பெற்ற வெறும் மதப்பற்றாகவே இருக்கும். கர்த்தருக்கு பயந்து அவருடைய வழியிலே நடக்கின்றவன் தன் இருதயத்தை பொல்லாப்புச்கு விலக்கி காத்துக் கொள்கின்றான். அதனால் அவன் கையிட்டு செய்யும் கிரியைகளிலே தேவநீதி காணப்படும். கிறிஸ்துவில் இருந்த சிந்தையே அவனுக்குள் எப்போதும் இருப்பதினால், மனிதர்கள் மேன்மைபாரட்டும் கிரியைகளல்ல, தேவன் விரும்பும் நற்கனிகள் அவனுடைய நாளாந்த வாழ்விலே வெளிப்படும். அவன் தன் ஆத்துமாவை மாயைக்கு விலக்கி காக்கின்றான். அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

ஜெபம்:

என்னை உமக்கென்று வாழ வேறு பிரித்த தேவனே, நான் பயபக்தியோடு உம்மை சேவிக்கின்ற வாழ்க்கையை வாழும்படிக்கு, உமது கற்பனைகளை மனதார கைகொள்ளும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 15:1-5