புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 16, 2023)

இக்கட்டு நாட்கள் சூழ்ந்து கொள்ளும் போது...

ரோமர் 8:37

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.


ஆபகூக் என்னும் தேவனுடைய தீர்க்கதரிசியானவன், கெடிதும் பயங்கரமுமான அந்நிய படைகள் தேசத்தை ஆக்கிரமிக்கும் நாட்கள் வரும் என்றும், இனி வரவிருக்கும் பயங்கரங்களையும் அறிந்த போது, 'அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலி வமரத்தின் பலன் அற்றுப்போ னாலும், வயல்கள் தானிய த்தை விளைவியாமற்போனா லும், கிடையில் ஆட்டுமந்தை கள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாம ற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சி ப்பின் தேவனுக்குள் களிகூருவேன்' என்று அறிக்கை செய்தான். அந் நாட்களிலே, தேசத்தின் பொருளாதாரம் அத்திமரம், திராட்சை செடி, ஒலிவமரம், தானியங்கள், ஆட்டுமந்தை, மாடுகள் போன்றவற்றின் பெருக்கத்தினால் அளவிடப்பட்டது. இவைகள் யாவும் தேசத்திலே அற்றுப் போகும் போது, அந்த தேசத்திலே பெரிதான பஞ்சம் உண்டாகும். அது மட்டுமல்லாமல், கெடிதும் பயங்கரமுமாக அந்நிய படைகள் தேசத்தை ஆக்கிரமிக்கும் போது, தேசத்தை கொள்ளையடித்து, மிகுதியானவைகளை சுட்டெரித்து, ஜனங்கள சிறைப்பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். இந்த நிலைமையை தீர்க்கதரிசியானவன் இன்னும் சந்திக்கவில்லை. இப்படி நடக்கும் என்று அவன் அறிந்த போது, 'என் குடல் குழம்பிற்று. அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது. என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று. என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களை எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.' என்று விசுவாச அறிக்கை செய்தான். இந்நாட்களிலே, எங்கள் மத்தியில் வாழும் சிலர், சில தேசங்களிலே இப் படியான சூழ்நிலைகளை சந்தித்திருக்கின்றார்கள். ஆனால், அநேகருக்கு இதன் தாக்கங்கள் இன்னதென்று தெரியாது. அப்படியான சூழ் நிலை வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று பதறுகின்றவர்கள் பலர். மனிதபெலத்தால், இவைகளை கடந்து கர்த்தருக்குள் மகிழ்சி யாக இருக்க முடியாது. ஆனால், தேவன் தரும் பெலத்தினால் நாங்கள் இவைகளையும் கடந்து செல்வோம் என்ற விசுவாச அறிக்கை எங்களில் இருக்க வேண்டும். வருங்காலத்திலே எந்நிலையானாலும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்ற நிச்சயம் நம்மில் வளர வேண்டும்.

ஜெபம்:

என்னோடு இருக்கும் தேவனே, உயர்வானாலும், தாழ்வானாலும், மரணமானாலும், ஜீவனானாலும், நீர் ஒருபோதும் என்னைக் கைவிட மாட்டீர் என்ற நம்பிக்கை என்னில் நாள்தோறும் பெருகச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆபகூக் 3:16-18