புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 15, 2023)

எந்தன் வாழ்வின் மேன்மை

சங்கீதம் 33:20

நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.


சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம் என்று தேவனை சார்ந்து வாழ்ந்த ராஜாக்கள், தங்கள் தேசத்திலே படைப்பலம் அதிமாக இருந்த நாட்களிலும் உண்மையாக அறிக்கையிட்டார்கள். ஏனெனில், எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவா னும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது என்பதை அவர் கள் நன்றாக அறிந்திருந்தார்கள். இன்றை நாளிலே, நாம் நம்முடைய நிலைமையை ஆராய்ந்து பாரக்க வேண்டும். மேற்கூறிய வசனத்தின் உண்மையான கருப்பொருளை அறியாமல், அதை நம் வாழ்வில் அறிக்கையிடுவது, நமக்கு இலகுவாக இருக்கலாம். ஏனெனில், நம்மிடம் இரதங்களும், குதிரைகளும் இல்லை. உங்களுடைய வாழ்க்கையின் ஆதாரம் என்ன? உங்கள் வாழ்விலும் எவைகளை மேன்மைபடுத்தி வாழ்ந்து வந்தீர்கள்? உங்கள் பிள்ளைகளுக்கு எவைகளை கற்றுக் கொடுத்திருக்கின்றீர்கள்? இன்று சில விசுவாசிகள், கல்வி, வேலை, அந்தஸ்து, ஆஸ்தியை பெருக்குதல் இவைகளையே தங்கள் வாழ்க்கையின் முதன்மையானவைகளாக்கிக் கொண்டு, அவைகளையே தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கின்றார்கள். பணமும், பொருளும் எந்த மனிதனையும் இரட்சிக்கவோ, அவன் ஆத்துமாவை மரண கண்ணியிலிருந்து விடுவிக்கவோ முடியாது. அவைகளால் உண்டாகும் வசதிகள், மனதில் நிறைவை கொடுப்பதில்லை. அவைகள் உங்கள் வாழ்வில் பெருகுவதால், மனச் சமாதானத்தை தருவதுமில்லை. அவைகளை தங்கள் வாழ்வில் மேன்மைப் படுத் துகின்றவர்கள், சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுந்து விடுகின்றார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறிகின்றது. எனவே, பணத்தையும் பொருளையும் மேன்மைப் படுத்தாமல். கர்த்தரை நம்பி அவரை உங்கள் வாழ்வில் மேன்மைப் படுத்துங்கள். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை என் தெய்வமாகக் கொண்டதினாலும், நீர் என்னை உமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட படியாலும் நான் பாக்கியம் பெற்றேன். இந்த மகா பெரிய சிலாக்கியத்திற்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:6-10