புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2023)

இந்நாளிதே கர்த்தர் படைத்தார்

சங்கீதம் 118:24

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.


நிலையான மாறாத சந்தோஷம் இந்த உலக வாழ்வில் உண்டாக வேண் டும் என்று அந்த நாளை நோக்கி மனிதர்கள் பிரயாசப்படுகின்றார்கள். அதிகாரங்கள் மாறினால் நிறைவு உண்டாகும். நாடுவிட்டு நாடு சென்றால் மனநிம்மதி வரும். பிள்ளைகள் தலைதூக்கினால் வாழ்வின் தொல்லைகள் ஓய்ந்து போய்விடும். நல்ல உத்தியோகத்தில் அமர்ந்தால் குறைவுகள் நிறைவாகும் என்று பலதரப்பட்ட எண்ணங்களோடு நாளைய நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். மனிதர்கள் தாங்கள் அறியாத எதிர்காலத்தைக் குறித்த பயம் அவர்கள் மனதை அழுத்திக் கொள்வதால், இன்றைய நாளிலே சந்தோஷமாக இருக்க மறந்து போய்விடுகின்றார்கள். விலைவாசிகள் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலே, என்னத்தை உண்போம்? என்னத்தை குடிப்போம்? என்னத்தை உடுத்துவோம் எங்கே தங்குவோம்? என்ற கேள்விகள் மனதில் உண்டானால், அது பரம பிதாவை அறியாத மனிதர்களுக்குரிய சிந்தை என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டிய வைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். இன்றைய நாளில் சந்தோமாகவும், நாளைய நாளைக் குறித்து கவலையற்றவர்களாகவும் வாழ விரும்பும் மனிதர்கள், தங்கள் வாழ்விலே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகின்றார்கள். இன்றைய நாளிலே மன அழுத்தத்துடனும், நாளைய நாளைக் குறித்த கவலையுள்ளவர்களுமாக வாழ விரும்புகின்றவர்கள் இந்த உலகத்தின் தேவைகளை தங்கள் வாழ்வில் முதன்மைப் படுத்தி, அவைகளை நாடித் தேடுகின்றார்கள். அதையே தங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுகின்றார்கள். அதனால், இருக்கின்ற நாட்களிலே சந்தோஷமாக வாழாமல், அவர்கள் தொடுவானமாக இருக்கும் வசதியைத் தேடி வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். பிரியமானவ ர்களே, இது கர்த்தர் உண்டுபண்ணின நாள். ஆளுகை செய்யும் ஆண்டவர் இயேசு நம்மோடு இருக்கின்றார். காலைதோறும் அவர் நமக்கு புதிய கிருபையைத் தருகின்றார். நம்முடைய தேவைகளை அறிந்த யெயோவாயீரே நம்பக்கம் இருக்கின்றார். எனவே இந்த நாளிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். அவர் உங்களை விசாரிக்கி ன்றவராயிருக்கின்றார். எனவே தேவன் தந்த மேன்மையான பரலோக ஆசீர்வாதங்களை தியானியுங்கள். எல்லா சூழ்நிலைகளிலும், அவருக் குள் மனரம்யமாகயிரு கற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நிறைவான வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, உம்மு டைய அழைப்பின் நோக்கத்தை மறந்து போகால், இலக்கை நோக்கி நான் பொறுமையோடு முன்னேறிச் செல்ல நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலி 4:4-6