தியானம் (ஐப்பசி 20, 2023)
தேவ கிருபையை அசட்டை செய்யாதிருங்கள்
ரோமர் 3:24
இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
விலைவாசிகள் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகிலே, தரமான பொருட்களை மலிவாக கொள்வனவு செய்வதற்காக, மனிதர்கள் இன்று இணையத்தளத்திற்கு சென்று, எங்கே பொருட்களை தரமானதாக, மலிவானதாக, குறைந்த நேரத்தில் வாங்கலாம் என்று தேடுகின்றார்கள். அவைகளில் அதிகமானவைகள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசிய மான பொருட்கள் அல்ல. இந்த கிழமை ஒரு இடத்திலே மலிவு விற் பனை அங்கே வாங்கலாம், அடுத்த கிழமை இன்ன இடத்திலே மா பெரும் மலிவு விற்பனை அங்கே போகலாம் என்று அங்கும் இங்கு மாக அலைந்து திரிகின்றார்கள். இவ் வண்ணமாகவே சிலர் தங்கள் வாழ் க்கையை இந்த உலகத்திலே பரப்பரப்பாகவும், அவசரவசரமாகவும், பல சோலிகளோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவைகள் மத்தியிலே, எப்படியாவது ஆலயத்திற்கு போய்விட வேண்டும் என்று, மலிவு விற்பனையில் பொருட்களை கொள்வனவு செய்வது போல, சிரமங்கள் இன்றி, சீக்கிரமாக சென்றுவரக்கூடிய ஆராதனைகள் எங்கே நடக்கின் றது என்று தேடுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள், பக்திவிருத்தி, சீர்பொருந்துதல், அர்ப்பணிப்பு, ஐக்கியம் இவைகளை குறித்த உணர்வு இல்லாமல் வாழத் துணிகின்றார்கள். இவைகளை காணும் பக்தியுள்ள சில தேவ பிள்ளைகளும், தங்கள் வாழ்விலே போராட்டங்கள் ஏற்படும் போது, அவர்களைப் போல நாமும் வாழ்ந்து விட்டுப் போனால் நல்லது என்று எண்ணுகின்றார்கள். பிரியமானவர்களே, போராட்டம் இல்லாத கிறிஸ்தவ வாழ்வு இல்லை. (எபேசியர் 6:12-13) கோணலும் மாறு பாடுமான உலகிலே நாம் வாழ்கின்றோம். கோதுமை மத்தியிலே சில களைகளும் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே நாம் எங்கு சென்றாலும் பிசாசின் தந்திரகளோடு நமக்கு போராட்டம் உண்டு. ஆனால், அவைகளை முற்றும் ஜெயங்கொள்ளும்படிக்கு தேவ ஆவியா னவர்தாமே நம்மோடு எப்போதும் இருக்கின்றார். விலை கொடுத்து வாங்க முடியாத, தம்முடைய பரிசுத்த இரத்தத்தினாலே ஆண்டவராகிய இயேசு நம்மை மீட்டுக் கொண்டார். மலிவு விற்பனை போல அந்த மகத்துவமுள்ள மீட்பை அசட்டை செய்யாமல், முதலாவதாக, ஊக்கத்தோடு தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.
ஜெபம்:
விலைமதிக்க முடியாத அருமையான மீட்ப்பை எனக்கு தந்த தேவனே, இந்த மகத்துவமுள்ள இரட்சிப்பை இந்த உலக பொருட்களைப் போல கருதாமல், எல்லாக் காவலோடும் அதை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபே 6:10-13