தியானம் (புரட்டாசி 20, 2023)
வாழ்வில் வளர்ச்சி உண்டோ?
கொலோசெயர் 3:2
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
ஒரு கிராமத்திலே வசித்து வந்த வாலிபனானவன், தான் அந்தக் கிராமத்திலே ஒரு தலைவனாக திகழ வேண்டும் என்ற குறிக்கோளோடு, சமூக சேவைகள், தான தர்மங்கள், மதச் சடங்குகளை செய்து வந்தான். இளம் பிராயத்திலிருந்து, அந்த வளர்ச்சிக்காக அயராது உழைத்து வந்தான். அவனுக்கு மேலாக அநேக சிரேஷ்ட உறுப்பினர்களும், கிராமத்து மூப்பர்களும் இருந்த போதும், அவன் ஒவ்வொரு வருடமும், தன் பதவியிலே முன்னேறிக் கொண்டு வந் தான். அடுத்தபடிக்கு போவதற்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதை அவன் மனதார நம்புகின்றானோ இல்லையோ என்பதைப் பற்றி கருத்திற்கொள்ளாமல், மக்கள் மனதை கவர்ந்து கொள்ள எதையும் எப்படியாவது செய்மு முடித்து, அந்த படியை தாண்டிக் கொள்வான். இப்படியாக உழைத்து வந்த அவன், மக்கள் மத்தியிலே பிரபல்யமா னதால், அவன் சீக்கிரமாக அந்த கிராம சபையின் தலைவனாக நியமிக்கப்பட்டான். ஆனால்;, அவனுடைய வாழ்விலோ பொய் இருந்து வந் தது. ஒரு காரியத்திலே முன்னேற வேண்டும் என்று அவன் தீர்மானித்த பின், அதை அடைந்து கொள்வதற்கு உண்மையை மறைத்துக் கொள்வது அவனுக்கு இலகுவான காரியமாக மாறிவிட்டது. மக்கள் எதை கேட்க விரும்புகின்றார்களோ, அதன் நன்மை தீமையை பற்றி எண் ண மில்லாமல், தீமையை நன்மையைப் போல பேசிக் கொள்வான். இவ னுடைய வளர்ச்சியை ஒரு மனிதனுடைய உண்மையான வளர்ச்சி என்று கூறிக் கொள்ள முடியுமோ. ஒருவேளை இந்த உலகம் அதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் மனிதனுடைய உள்ளந்தரியங்களை அறிகின்ற தேவன் முன்னிலையில் இது ஏற்புடையதாகுமோ? சற்று உங்கள் வாழ்க் கையை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று மனிதர்கள் கல்வியிலே, வேலையிலே முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பல தியாகங்கைள செய்து அயராது உழைக்கின்றார்கள். மனிதனுடைய சுபாவங்களிலே தேவன் விரும்பும் வளர்ச்சியில்லாமல், வெறும் பட்டம், பதவி, அந்தஸ்துக்களை பெற்றுக் கொள்வதினாலே, அவனுடைய வாழ்விலே ஏற்படும் வளர்ச்சியினால் அவன் தேவனிடத்தில் எதையும் பெற்றுகொள்வானோ? நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். இந்த உலகம் விரும்பும் வளர்ச்சியை மேன்மைபடுத்தாமல், தேவன் விரும்பும் திவ்விய சுபாவங்கள் உங்களில் வளர இடங்கொடுங்கள்.
ஜெபம்:
உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலில் வளர என்னை அழைத்த தேவனே, இந்த உலகம் மேன்மைப்படுத்துபவைகளை தள்ளிவிட்டு, பரலோக மேன்மைகளை தேட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 பேதுரு 1:3-8