புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 24, 2023)

பாவத்தினால் உண்டாகும் பெலவீனம்

ரோமர் 6:1

ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலை நிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.


ஒரு சிறிய வாகன விபத்தொன்றிலே அகப்பட்டுக் கொண்ட வாலிபனானவனின் கையொன்றில் எலும்பு முறிவடைந்து. அந்த கையெலும்பின் முறிவு குணமடையும் வரை அந்த கையை ஒரு நிலையிலே வைத்திருக்கும்படிக்கு, வைத்தியர் அந்தக்கையை கட்டுத்துணியினால் வார்ப்பு போட்டிருந்தார். அவன் வழமையாக தான் செய்யும் வேலைகளை செய்ய முடியாதிருந்ததால், அவனுடைய தாயானவள் அவனுக்கு அன்பு காட்டி, அவனை நன்றாக கவனித்தாள். அந்தக் கையானது முற்றாக குணமடையும்வரை, அவனுடைய தகப்பனானவர் அவனுக்கு ஆதரவாக இருந்து அவனுடைய வேலைகளிலே மிகவும் உதவியாக இருந்து வந்தார். இப்படியாகவே தேவ ஆவியானவர் தாமே நம்முடைய பெலவீன வேளைகளிலே நமக்கு பெலனாக வருகின்றார். நம்முடைய குறைவுகளிலே நிறைவாக வருகின்றார். இது தேவனுடைய கிருபை. ஆனால், அந்த வாலிபனானவன் களவு செய்ய ஆரம்பித்தான் என்று அவனுடைய பெற்றோர் அறிந்த போது, அவனுக்கு ஆலோசனைகளை கூறி, கடிந்து கொண்டு, அவனை சிட்சித்தார்கள். அவன் களவு செய்து கொண்டிருக்கட்டும், அது அவனுடைய பெல வீனம், அவனுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று பெற்றோர் கூறுவதில்லை. எனவே, நாமும் பாவத்திலே வாழ்ந்து கொண்டு, அது என் பெலவீனம், அதை நான் விட்டுவிடக்கூடாது. ஆவியானவர் எனக்கு பெலனாக வருவார் என்று பாவத்திலே வாழ்ந்துவிட முடியாது. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு தேவனானவர் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். அந்த நீடிய பொறுமையும் தேவ கிருபையே. ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பிரியமானவர்களே, நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு தேவனானவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். எனவே, பாவத்தினால் உண்டாகும் பெலவீனத்தில் நாம் மூழ்கி மாண்டு போகாமல். தேவனிடத்திலே அறிக்கை செய்து விட்டுவிடுவோமாக.

ஜெபம்:

இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கிருபையை நான் அசட்டை பண்ணாமல், பரிசுத்தமாய் வாழ எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:7-10