புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 12, 2023)

தடைகளுக்கு காரணர் யார்?

சங்கீதம் 139:23

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;


இன்று காலை ஆராதனைக்கு வரும் வேளையிலே தடைகள் இருந்ததால், ஆராதனைக்கு முன்குறித்த நேரத்திற்கு வரமுடியவில்லை என்று ஒரு விசுவாசியானவன் கூறிக் கொண்டான். அப்படி, என்ன தடை ஏற்பட்டது என்று அவன் நண்பனானவன் கேட்ட போது, அவன் மறு மொழியாக: காலை எழுந்திருப்பதற்கு தாமதமானதால், நெடுஞ்சாலையிலே சற்று வேகமாக வந்தேன். பொலிசார் இடைநிறுத்தி எச் சரிப்போடு, பணம் கட்டும்படியாக அபராத சீட்டை வழங்கினார்கள் என்று கூறினான். அதனால், 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகி விட்டது என்றான். அதற்கு நண்பனா னவன் மறுமொழியாக: நண்பா, நீ ஆராதனைக்கு நேரத்தோடு வருவ தற்கான தடை பொலிசார் அல்ல, நீ தான் அதற்கு காரணம். ஞாயிறு ஆராதனை இருக்கின்றது என்று அறிந்தும், நேற்றிரவு நீ நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. அதனால்தான் நீ காலையிலே நேரத்தோடு எழுந் திருக்க உனக்கு முடியவில்லை. பொலிசார் உன்னை தடுத்து நிறுத்தியது தேவகிருபை என்று எண்ணிக் கொள். ஒருவேளை நீ வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று, உன் உயிருக்கும், நெடுஞ்சாலையிலே பயணம் செய்யும் அப்பாவி பொது மக்களது உயிருக்கும் சேதம் உண்டாக்க முன்னதாகவே உன்னை அவர்கள் தடுத்தி நிறுத்தினார்கள். எனவே, உன் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, தேவனை ஆராதிக்க இருக்கும் தடைகளை அங்கிருந்து அகற்றிப் போடு என்று அறிவுரை கூறினான். ஆம் பிரியமானவர்களே, நாமும் நம்முடைய வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து பார்போமாக இருந்தால், நம் வாழ்வில் ஏற்படும் குழப் பங்களுக்கும், தடைகளுக்கும் மூல காரணம் என்ன என்பது தெளி வாகும். ஆண்டுகள் கடந்து செல்லும் போது, விசுவாசிகள் தங்கள் வழி களை ஆராய்ந்து பார்க்க தவறிவிடுவதால், உணர்வற்ற நிலையை அடைந்து விடுகின்றார்கள். மகா பரிசுத்தமுள்ள, பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படும் சிலாக்கியத்தை பெற்ற நாம், தேவ சமுக்திலே, தேவனை நோக்கி: தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று தேவ பக்தன் பாடியது போல, நாமும் நம் வழிகளை ஆராய்ந்து, நம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, நான் வேறு பிரிக்கப்பட்டவன் என்று கூறிக் கொண்டு, என் வழிகளில் வேதனை உண்டாக் காமல் வாழும்படிக்கு உணர்வள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:105