புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 03, 2023)

உன்னதத்தில் உயர்ந்தவர்

தானியேல் 4:34

அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம்,


பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் மகத்துவம் பெருகிவானபரியந்தமும், அவனுடைய ஆளுகை பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது. பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரிகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார் என்று அந்த மகா ராஜாவுக்கு தேவனுடைய தாசனாகிய தானியேல் வழியாக சர்வ வல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருந்தார். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறிந்திருந்தும், இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று அறிக் கையிட்டான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. சர்வ வல்லமையுள்ள தேவன் முன்குறித்த காலம் நிறைவேறும் அவன் மிருகங்களோடே, மிருகங்களைப் போல சஞ்சரித்து வந்தான். ஒருவேளை இன்றும் சிலர் அந்த ராஜாவைப் போல தங்கள் ஆளுகையை குறித்து மேன்மைபா ராட்டலாம். தேசத்திலே உண்டாயிருக்கும் செழிப்புக்கள் தங்களுடைய ஆக்கங்கள் என்று பறைசாட்டிக் கொள்ளலாம். பெருமையானவைகளை பேசிக் கொள்ளலாம். ஆனால், உன்னத்திலே வீற்றிருக்கும் உன்னத மான தேவன் மனிதர்களுடைய இருதயங்களின் நினைவுகளை ஆராய்தறிகின்றவர்கள். அவர்களுடைய பெருமையான பேச்சுக்கள் அறிந்திருக்கின்றார். கர்த்தர் முன்குறித்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாருக்கு புத்தி திரும்ப வந்தது. அவன் உன்னதமானவரை ஸ்தோத்தரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினான். அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றான். ஆம் பிரியமானவர்கள், தேசத்திலே தேவ சித்தம் நிறைவேறும்வரை, பொறுமையோடு காத்திருந்து ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் ராஜரீகம் பண்ணுகின்றார்.

ஜெபம்:

அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்துகின்ற தேவனே, உலகிலே நடப்பவைகளை நீர் அறிந்திருக்கின்றீர். உம்முடைய சித்தம் நிறைவேறும்படி காத்திருக்கும் உள்ளத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 99:1-2