தியானம் (ஆடி 30, 2023)
காரணமில்லாத காயங்கள்
லூக்கா 6:28
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்
வாழ்க்கiயில் ஏற்படும் காரணமில்லாத காயங்கள் மனிதர்கள் மனதிலே பல கேள்விகளை ஏற்படுத்துகின்றது. நம்பியிருந்தோர், நட்போடுடிருந்தோர், நன்மைபெற்றோர் நன்மைக்கு தீமை செய்யும் போது, உண்டாகும் மனவேதனை விபரிக்க முடியாதவைகள். 'நான் எத்தனையோ நன்மைகளை செய்தேன். ஆனால் அவர்கள் என்னுடைய குடும்பத்தைப் பற்றி காரணமில்லாமல் அவதூறு பேசித்திரிகின்றார்கள். அதனால் என் வாழ் வின் சமாதானத்தை நான் இழந்து போய் விட்டேன்' என்று ஒரு விசுவாசியானவன் தன் நிலைமையை கூறினான். முத லாவதாக, இந்த உலக வாழ்க்கையில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு என்பதை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அந்த உபத்திரவங்கள் யார் வழியாக வரலாம்? அது எந்த மனிதன் வழியாகவும் வரலாம் என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இரண்டாவதாக அவைகளினால் நான் இழந்து போன மனசமாதானத்தை எப்படி பெற்றுக் கொள்ள முடியும்? மனதிலே ஒட்டியிருக்கும் பகை, வன்மம், கசப்பு இவை யாவும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டிருக்கின்றது. அவை யாவற்றையும் நான் என் மனதைவிட்டு அகற்றிவிட வேண்டும். அதை எப்படிச் செய்வது? தேவனுடைய வார்த்தை உங்களில் கிரியை செய்ய இடங்கொடுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் (லூக்கா 6:28). ஒருவேளை உங்களை காரணமின்றி சபித்தவர்கள், நிந்தித்தவர்கள், அநியாயம் செய்தவர்கள் இன்னும் மனந்திரும்பாமல் இருக்க லாம். உங்களிடம் மன்னிப்பை கேட்க மனதில்லாமல் இருக்கலாம் அல்லது இன்னும் அநியாயம் செய்து கொண்டே இருக்கலாம். நீங்களோ, அவற்றைப் பொருட்படுத்தாமல் ஆண்டவர் இயேசு கூறிய சமாதானமான தேவ பிள்ளையின் வாழ்க்கை முறையின்படி, உங்கள் மனதிலே அவர்களை ஆசீர்வதியுங்கள். அவர்கள் தங்கள் அநியாயத்திலே அழிந்து போகாமல், மனந்திரும்பி நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று அவர்களுக்காக வேண்டுதல் செய்யுங்கள். நீங்கள் தனித்து விடப்படவில்லை. தேவ ஆவியானவர்தாமே உங்களோடிருந்து, சத்திய வழியைக் காட்டி, அந்த வழியிலே நடப்பதற்கு உங்களுக்கு ஆலோசனை கூறி, உங்களுக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வார்.
ஜெபம்:
என் பாவங்களை மன்னித்து உம்முடைய பிள்ளையாக என்னை அணைத்துக் கொண்ட பரம பிதாவே, நீர் எனக்கு பாராட்டின கிருபையை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலி 4:4-6