புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 26, 2023)

யாருடைய விருப்பதை நிறைவேற்றுகின்றோம்?

யோவான் 15:10

நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.


புறதேசத்திலே வாழ்ந்து வந்த மனிதனானவனொருவன், அநேக ஆண்டுகளுக்கு பின்னர்தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு சென்றிருந்தான். தன் இளவயதின் நண்பர்களோடும், தன் உறவினர்களோடும் நாட்களைக் களிக்க வேண்டும் என்ற ஆவலுடையவனாக இருந்தான். அவனுடைய வருகையை எதிர்பாத்திருந்த நண்பர்களும், உறவினர்களும் பரவசமடைத்தார்கள். அவனுக்காக பெரும் ஒன்றுகூடலை ஆயத்தப்படுத்துவதில் அநேக நேரத்தையும் பணத்தையும் அவர்கள் செலவிட்டார்கள். புறதேசத்திலிருந்து வந்திருக்கும் தங்கள் நண்பனை, உறவினனை கௌரவிக்க வேண்டும், சந்தோஷப்படுத்த வேண்டும் என்று பல ஏற்பாடுகளை செய்வதில் நாட்களை செலவிட்டார்கள். அதைக் கண்ட அந்த மனிதனானவன், அவர்களை அழைத்து, அவர்களை நோக்கி: எனக்கு அன்பான நண்பர்களே, உறவினர்களே, என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணங் கொண்டிருப்பதே எனக்கு பெரும் மனமகிழ்சியைத் தருகின்றது. ஆனால், நான் உங்களோடு, உங்கள் வீட்டிலே, முன்பிருந்தது போல நேரத்தை செலவிடுவதையே விம்புகின்றேன். அதுவே என் மனவாஞ்சை. ஆனால், நீங்களோ, என்னோடு நேரத்தை செலவிடாமல், கொண்டாட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என்று அதிலே அதிக பிரயாசப்பட்டு வீணாக கவலையடைகின்றீர்கள் என்று கூறினான். எனக்கு தேவையானது மிக வும் இலகுவானது. நீங்கள் என்னோடு இருப்பதையே நான் விரும்புகின் றேன் என்றான். பிரியமான சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசுவிற்காக, பிரயாசப்படுகின்றோம். அவருடைய நாமத்தின் மகிமைக்காக பல தானதர்மங்களை செய்வதிலும், நற்கிரியைகளை நடப்பிப்பதிலும் கருத்துள்ளவர்களாக இருந்து வருகின்றோம். பெரிதான ஆராதனை களை செய்கின்றோம். ஆனால், அவர் நம்மிடத்தில் விரும்பும் காரியமானது நம் மிடத்தில் உண்டா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆண்டவர் இயேசுவோடுள்ள நம்முடைய தனிப்பட்ட உறவின் வளர்ச்சி, அவருடைய வார்த்தை நம்மில் நிலைத்திருத்தல், நாம் அவர் வார்த்தையில் நிலைத்திருத்தல் போன்ற காரியங்களை நாம் சிந்திக்க வேண்டும். நாம் விரும்பும் காரியங்களை அவருக்காக செய்வதை விட்டுவிட்டு, அவர் விரும்பும் காரியங்களை நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேற்றுவோமாக. அதனால், நாம் அவருடைய அன்பிலே நிலைத்திருக்கின்றோம் என்பது உறுதியாகும்.

ஜெபம்:

பிதாவாகிய என் தேவனே, நான் விரும்பிய காரியங்களை செய்வதே உம்முடைய சித்தம் என்று எண்ணாமல், உமக்கு பிரியமானவை களை செய்ய எனக்கு கற்றுத்தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 4:34

Category Tags: