புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 02, 2023)

உணர்வுள்ள ஜீவியம்

1 தெசலோனிக்கேயர் 5:19

ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த நண்பர்கள் வருட முடிவிலே இரவு ஒன்றுகூடலொன்றை ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். ஒளி வீசும் விளக்குகளை கொழுத்தி, கம்பத்திலே தூக்கிவிட்டு, இரவு முழுவதும், உண்டு, குடித்து, நடனமாடி, உல்லாசமாக இரவை களித்துக் கொண்டிருந்தார்கள். விளக்கின் வெளிச்சத்திலே, பல களியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையிலே, விளக்குகளுக்கு எண்ணை ஊற்றி, அதன் திரிகளை சுத்திகரித்து, சிம்மினிகளை சுத்தம் செய்ய மறந்து போனதினாலே, விளக்கிலிருந்த நெருப்பு அணைந்து போய்விட்டது. அவர்களுடைய விளக்குகளிலிருந்து நெருப்பு அவர்களுடைய கவனயீனத்தால் அணைந்து போனதால், அந்த கிராமத்திலுள்ள யாவரின் விளக்குகளிலும் நெருப்பு அவிந்து போய்விட்டது என்பது பொருளல்ல. ஒருவேளை கிராமத்திலுள்ள யாவரின் விளக்கிலுள்ள நெருப்பானது அவர்களுடைய கவனயீனத்தால் அணைந்து போய்விட்டாலும், விளக்கும் நெருப்பும் இல்லாமற்போய்விடுவதில்லை. பிரியமானவர்களே, இந்த உலகிலே பல மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து பல காரியங்களை பேசிக் கொள்கின்றார்கள். அவர்களில் சிலர், இயேசுவை அறிந்தி ருக்கின்றோம் என்று கூறியும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை தங்கள் வாழ்வில் அவித்துப் போடுவதால், திரித்துவத்தின் ஒரு நப ராகிய பரிசுத்த ஆவியானவர் இல்லாமற் போய்விடமாட்டார். கருப் பொருளாவது, இரட்சிப்பின் நாளுக்கென்று முத்திரையாக பெற்ற ஆவியானவரின் கிரியைகளை சில விசுவாசிகள் தங்கள் வாழ்விலே அவித்துப் போடுகின்றார்கள். அவர் கொடுக்கும் பரிசுத்த வெளிச்சத் திலே, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக, அந்தகார கிரியைகளுக்கு இடங் கொடுத்து, அவர்கள் ஈவாக பெற்ற ஆவியை தங்கள் வாழ்வில் அவித்துப் போடுவதால், உணர்வற்ற கனியற்ற வாழ்க்கையை வாழ தங்களை ஒப்புக் கொடுக்கின்றார்கள். நீங்களோ, முதலாவதாக, உங்களுடைய அழைப்பின் நோக்கத்தை உணர்ந்தவர் களாக, வேதத்தை வாசித்து, தியானியுங்கள். அனுதினமும் ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். தெளிந்த புத்தியை கெடுத்துக் கொள்ளாமலும், சுத்த மனசாட்சி உணர்வற்றுப் போகாதபடிக்கு, ஆவியானவரின் ஆலோ சனைகளை ஏற்று, சத்தியத்திலே நடக்க கற்றுக் கொள்ளுங்கள். மாம்ச எண்ணங்களுக்கு இடங் கொடுத்து, ஆவியானவரின் கிரியை களை உங்கள் வாழ்வில் அவித்துப் போடாமல், அனல்மூட்டி எரியவிடுங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வுகென்று என்னை அழைத்த தேவனே, ஆவியை நான் அவித்துப் போடாமல், உணர்வுள்ள ஜீவியம் ஜீவிக்கும்படிக்கு, உம் வார்த்தையின் வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 1:6