புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 16, 2023)

மனிதர்கள் மத்தியிலே நீங்கள் யார்?

1 யோவான் 4:18

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்


பெரிய கம்பனியொன்றிலே வேலைக்கு சேர்ந்த மனிதனானவன், கர்த்தருக்கு பயந்து அவர் வார்த்தையின் வழியிலே வாழ்கின்றவனாக இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், தன்னை யார் என்று மற்றவர்களுக்கு காண்பிப்பதற்கு எவ்வித தயக்கமும் இல்லாதவனாக, மாலையிலும், வார இறுதிநாட்களிலும் தேவ காரியங்களில் ஈடுபடுவதிலே தான் நேரத்தை முதலீடு செய்கின்றேன் என்று கூறிக்கொள்வான். அதனால், ஆரம்ப வருடங்களிலே, பலருடைய நட்பையும் நன்மதிபபையும் அவன் இழந்து போனான். இத்தனை வேலையாட்களுள்ள இந்தக் கம்பனியிலே, தேவ பயமுள்ளவன் நான் ஒருவன்தானா? வேறு யாரும் இல்லையா என்று தேடிக்கொள்வான். அவனுடைய ஆச்சரியத்திற்கு, அவன் வேலை செய்யும் பிரிவிலேயே ஆலயத்திற்கு செல்லும் ஒரு மனிதன் இருந்தான். ஆனால், அவன் தேவ பயமுள்ளவர்களைக் குறித்து பரியாசம் செய்யும் மனிதர்களோடு ஐக்கியமாக இருந்து, அவர்கள் மத்தியிலே, தன்னை அவர்களைப் போலே காண்பித்துக் கொள்வான். தேவ பயமில்லாதவர்கள் அங்கே பெலமிக்கவர்களாகவும், செல்வாக்குள்ளவர்களாகவும் இருந்ததால், அவர்களை திருப்திபடுத்தும்படிக்கு, சில வருடங்கள் அந்த இடத்திலே வேலை செய்தும், தன்னை யார் என்று அவர்களுக்கு அடையாளம் காண்பிக்க அவன் விருப்பமில்லாதவனாக இருந்தான். ஏன் அவன் அப்படி நடந்து கொண்டான்? ஏன் அவன் பரி யாசக்காரரோடு ஐக்கியமாக இருந்தான்? முதலாவதாக, வேலை போய்விடுமோ என்று பயம், இரண்டாவதாக, ஆண்டவர் இயேசுவை தன் இரட்சகர் என்ற அறிக்கையிட அவனுக்கு வெட்கம். தேவ அன்பானது இந்த உலகத்தை குறித்த பயத்தை புறம்பே தள்ளும். அப்படிப்பட்டவன், மனிதர்கள் மத்தியில் கர்த்தரைக் குறித்து சாட்சி சொல்வதை மேன்மையானது என்று கருதுகின்றான். தேவ அன்பில் நிலைத்திருக்காதவனிட த்தில் தேவபயம் இல்லை எனவே இந்த உலகத்தை குறித்த பயம் அவன் இருதயத்திலே ஆட்கொண்டு விடுகின்றது. அவன் இந்த உலக போக்கிலே வாழ்பவர்கள் மத்தியிலே தேவனைக் குறித்து சாட்சி பகர வெட்கமடைகின்றவனாக இருக்கின்றான். பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தர், நாம் பாவிகளும் துரோகிகளுமாக இருந்த போது, நம்மைக் குறித்து வெட்கப்படாமல், நம்மீது அன்புகூர்ந்து தம் ஜீவனையே நமக்காக கொடுத்தார். எனவே நம்மை கர்த்தருடையவர்கள் என்று காண்பிப்பதற்கு நாம் ஒருபோதும் வெட்கமடையக்கூடாது.

ஜெபம்:

என்னை நேசிக்கும் பரம தந்தையே, நான் எப்போதும் உம் அன்பிலே நிலைத்திருக்கவும், என் உள்ளத்தில் உலகத்தைக் குறித்த பயம் என்னை ஆட்கொள்ளாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6