புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 08, 2023)

வாழ்வுக்குச் செல்லும் பாதை

மத்தேயு 7:14

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்


இனி தாங்கள் வசிக்கும் ஊரிலே அநேக நாட்கள் இருக்க முடியாது. எனவே வேறொரு ஊருக்கு சென்றுவிட வேண்டும் என்று ஊரார் நிச்சயத்தோடு, பகுதிபகுதியாகவும், பங்கு பங்காகவும், பயணத்தை ஆரம்பித் தார்கள். ஊரைவிட்டு வெளியே வந்ததும், வேறு பல மனிதர்களோ ஒரு குறிப்பிட்ட சௌகரியமான பாதை வழியாக பயணம் செய்து கொண் டிருந்தார்கள். அந்தப் பாதையானது சமதளமானதும், மிருதுவானதுமாக காட்சியளித்தது. எனவே, அந்த ஊரிலிருந்து புறப்பட்ட பலரும்; அந்தப் பாதையைத் தெரிந்து கொண்டார்கள். அதைக் கண்ட அந்த ஊரின் வயது முதிர்ந்த மனிதனானவர்: மக்களே, இந்தப் பாதை பார்வைக்கு வசதி நிறைந்ததாக காட்சியளிக்கின்றது. அநேகர் இந்த வழியிலே செல்வதால், இது சிறந்த வழி என்று எண்ணி விடாதிருங்கள். இதன் வழியில் வேதனைகளும், முடிவில் துன்பமும் உண்டாகும். எனவே இந்த வழியை விட்டுவிலகுங்கள் என்று அறிவுரை கூறினார். அதை கேட்ட சில மனிதர்கள் அவரை நோக்கி: ஐயா, நாங்கள் அறிந்த நாட்கள் முழுவதும் நீங்கள் இந்த ஊரிலேயே வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்களுககு எப்படி இந்த பரந்த வழியின் முடிவைப் பற்றித் தெரியும் என்று கேட்டா ர்கள்.இந்த வழியூடாக ஆயிரமாயிரமாக, கல்விமான்கள், ஞானிகள், பிரபுக்கள் செல்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் மதியற்றவர்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? என்றார்கள். அதற்கு அந்த வயதானவர்: பிள்ளைகளே, பல ஆண்டுகளுக்கு முன்னதாக, நான் நீங்கள் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டு, என் கண் களுக்கு அருமையாகத் தெரிந்த இந்த விசாலமான வழியிலே சென்று என் வாழ்நாட்களின் பெரும்பகுதியை விரயமாக்கிக் கொண்டேன். எப்படியோ சொற்பகாலம் உல்லாசமாக இருந்தது, அதன் முடிவிலே வேதனையும் துன்பமுமே. உண்டானது பலர் திரும்பி வரமுடியாதபடிக்கு தங்கள் வாழ்வைக்கூட கெடுத்துக் கொண்டதைக் கண்டேன். எனக்கோ இன்னுமொரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, அதை நான் விரயமாகக்க மாட்டேன் என்று ஒரு குறுகிய பாதை வழியாக அவர் தன் பயணத்தை தொடர்ந்தார். ஆம் பிரியமானவர்களே, பெரும்பான்மையானோர் செல்லும் வழியே சிறந்ததென்று நாம் எண்ணிக் குழப்பமடையாமல், ஜீவனுக்கு செல்லும் வழியிலே செல்லுவோமாக. அதன் வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாக இருந்தாலும், முடிவிலே நித்திய பேரின்பம் உண்டு.

ஜெபம்:

நித்திய வழியை எனக்கு காண்பித்த தேவனே, உலகத்தின் போக்கில் போகும் வழியிலே சென்று, என் அழைப்பை நான் கெடுத்துக் கொள்ளாமல், நீர் காண்பித்த இடுக்கமான வாசல் வழியே செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:21