புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 05, 2023)

அறிவு பெருத்தவன்

சங்கீதம் 146:5

தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.


நாளுக்கு நாள் நவீனமடையும் உலகம். அதிவேகமாக விருத்தியடையும் தொழில்நுட்ப வளர்ச்சி. மனிதகுலத்தை; வியக்கவைக்கும் விஞ்ஞானம். மனித ஆற்றல்களை பிரதிபலிக்கும் இயந்திரங்கள். இப்படியாக இந்த உலகத்தின் போக்கை பார்த்து ஆச்சரியப்படுகின்றீர்களா? இவைகளை அறியாத மனிதர்கள் அற்பமானவர்களும், கல்லாதவர்களும் என்று எண்ணப்படும் காலத்திலே வாழ்கின் றோம். இந்த வளர்ச்சிகளினாலே மனிதர்களுக்கு பிரயோஜனம் உண்டு. அதே வேளையிலே பாதகமான பக்கவிளைவு இல்லாத மனிதனுடைய ஆக்கம் எதுவுமேயில்லை. சில தேவ பிள்ளைகளும்கூட தேவனுடைய ஞானத்தைவிட இந்த உலகத்தின் ஞானத்தை தங்கள் வாழ்விலே மேன்மைப்படுத்தி வஞ்சிக்கப்பட்டுப் போகும் காலமாக இருக்கின்றது. மனிதனுடைய ஆக்கங்களின் முடிவு என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பூமிக்குரியவைகள் யாவும் அழிந்து போகும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. நம்முடைய சரீரமும் மண்ணாக இருக்கின்றபடியால், அது ஒருநாள் மண்ணுக்கே திரும்பும். பரலோகத்திற்குரியவைகள் நித்தியமானவைகள். ஒரு மனிதனானவன் இந்த உலகத்திலு ள்ளவைகள் யாவற்றையும் தனதாக்கிக் கொண்டாலும் அவன் தன் ஆத்துமாவிற்கு கேடு விளைவித்தால் அதனால் அவனுக்கு இலாபம் என்ன? தேவனுடையவர்கள், தேவனுடையவைகளைத் தேடுகின்றார்கள். இந்தப் பூமியில் உயிர்வாழ தேவையானவைகளை மட்டுமே தங்கள் பிழைப்பிற்காக எடுத்துக் கொண்டு, தங்கள் நாட்களை அழியாததும், வாடாதமுமான நித்திய வாழ்விற்குரியவைகளை வாஞ்சித்து தேடுகின்றார்கள். இந்த உலக ஞானிகள் அப்படிப்பட்டவர்களை பார்த்து பைத்தியமானவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றார்கள். இந்த உலக அறிவை மேன்மைப்படுத்தி, அதை நாடித்தேடி வாழும் மனிதர்கள், இந்த உலகத்தின் போக்கின்படி வாழும் மனிதர்களுக்கு ஞானவான்களாகவே தோன்றுகின்றார்கள். மனிதனுடைய ஆவி பிரியும் நாளிலே அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் யாவும் அவனோடுகூட அழிந்துபோம். உலக அறிவிலே தேர்ச்சி பெற்றவனாக இருந்தாலும் அல்லது உலக அறிவைக் குறித்து ஒன்றுமே அறியாதவனாக இருந்தாலும், தேவனாகிய கர்த்தரை அறிந் து, அவர்மேல் தன் நம்பிக்கையை வைத்து அவருடைய வார்த்தையின் வழியிலே வாழ்பவன் பாக்கியம் பெற்றவனாக இருக்கின்றான். அவன் நித்திய நித்தியமாய் தேவனோடுகூட வாசம் பண்ணுவான்.

ஜெபம்:

என் பிதாவாகிய தேவனே, நான் உம்மையும், உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவையும் அறிகின்ற அறிவிலே வளர்ந்து பெருகுவ தையே எப்போதும் வாஞ்சித்து தேட என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:18-25