புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 28, 2023)

தேவனுக்கு பிரியமானவர்கள்

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்


ஒரு வீட்டின் சொந்தக்காரன், தன் குடும்பத்தோடு தூர தேசமொன்றிற்கு செல்ல வேண்டிய அவசியமேற்பட்டதால், தன் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக் காரனை அழைத்து, வீட்டின் திறப்புக்கள் யாவற்றையும் அவன் கையில் கொடுத்து, நாங்கள் திரும்பி வர பல நாட்களாகும். நீ இந்த வீட்டை கவனமாகப் பராமரித்து காத்துக் கொள், நாங்கள் திரும்பி வரும் போது, உனக்கு அதற்குரிய சன்மானத்தை தருவேன் என்று கூறிச் சென்றான். எத்தனையோ கோடிக்கணக்கான பெறுமதியுள்ள பொருட்கள் அந்த வீட்டிற்குள் இருந்தும், அவன் அவைகள் மேல் தன் புலன்களை செலுத்தாமல், தன் எஜமனானானவன் சொன்ன வார்த்தையை விசுவாசித்து, அந்த வார்த்தையின்படி உண்மையுள்ளவனாக இருந்தான். தன் நண்பர்களோடு சேர்ந்து வீட்டை விட்டுச் செல்லாமலும், அவர்களை வீட்டிற்கு அழைத்து வீட்டை மாசுபடுத்தாமலும், மதுபானம் அருந்தி வெறி கொண்டு தூங்காமலும், மிகவும் ஜாக்கிரதையுள்வனாக விழித்திருந்தான். எஜமானானவன் திரும்பி வந்தபோது, தன் வேலைக்காரனின் உண்மைத் தன்மையைக் கண்டு ஆச்சரியப்பட்டான். தன் வார்த்தையின்படி அவனுக்கு மிகுந்த சன்மானத்தை கொடுத்தான். பிரியமானவர்களே, தேவனை விசுவாசிக்கின்ற நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே விசுவாசத்தின் கிரியைகளை நடப்பிக்கின்றீர்களா? நோவா என்ற மனிதனுடைய நாட்களிலே, மழையைக் குறித்தோ, வெள்ளப் பெருக்கைக் குறித்தோ எந்த அறிவுமில்லாதிருந்த போது, தேவனாகிய கர்த்தர் ஒரு பேழையை உண்டு பண்ணு என்று நோவாவிடம் கூறினார். விசுவாசத்தினாலே நோவா வாழ்ந்த காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, அந்த நாளை நோக்கி வாழ்ந்து வந்தான். தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்;. நம்முடைய கர்த்தராகிய இயேசு நான் மறுபடியும் வந்து உங்களை அழைத்து கொண்டு செல்வேன். எனவே இந்த உலகத்தின் போக்கில் செல்லாதபடிக்கு, உணர்வுள்ளவர்களாக அவருடைய வருக்கைக்காக காத்திருக்கும்படி கூறியிருக்கின்றார். எதிர்ப்புக்கள், ஏளனங்கள், நஷ;டங்கள், அவமானங்கள் மத்தியிலும், நாம் உலக பொருட்களின்மேல் கண்களை பதிய வைக்காமல், நம்முடைய பேழையாகிய கிறிஸ்துவுக்குள்ளானவர்களாக நாம் வாழ வேண்டும். விசுவாசித்தால், நோவாவைப் போல விசுவாசத்தின் கிரியையை பெறுமையோடே நடப்பியுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, வேதத்திலே காணும் உமக்கு பிரியமான பாத்திரங்களைப் போல, விசுவாசத்தின் கிரியைகளை நான் என் வாழ்விலே நடப்பிக்கும்படி நீர் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:26