தியானம் (வைகாசி 12, 2023)
நம்முடைய பார்வை
ரோமர் 8:31
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முன்பாக நிற்கும் மலைபோன்ற பிரச்சனையை எந்தக் கண்களால் பார்க்கின்றீர்கள்? இந்த கேள்வியானது, இந்த உலக போக்கிலே வாழ்பவர்களுக்கு ஒருவேளை நகைப்பாக இருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசுவை பற்றியிருக்கும் நமக்கு, மாம்ச கண்கள் மட்டுமல்ல, மனப்பிரகாசமுள்ள மனக் கண்களும் உண்டு. அந்த மனக்கண்கள் நம்முடைய விசுவாசத்தின் கண்களாக இருக்கின்றது. மாம்ச கண்களால் அதாவது இந்த உலகத்தின் முறைமையின்படி பிரச்சனைகளை நோக்கிப் பார்க்கின்றவர்களுக்கு இந்த உலகத்தினால்; உண்டாகும் பயமும் திகிலும் சூழ்ந்து கொள்கின்றது. ஆவிக்குரிய விசுவாசக் காண்களால் தங்கள் சூழ்நிலைகளை பார்க்கின்றவர்கள், ஆவிக்குரிய உலகத்தின் திட நம்பிக்கையும் தைரியத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள். ஒரு சமயம், சமஸ்த இஸரவேல் ராஜ்யத்தையும் கலங்கச் செய்யும் ஒரு மகா பெரிதாக பிரச்சனையொன்று அவர்களை எதிர்நோக்கிது. பெலிஸ்திய நாட்டைச் சேர்ந்த கோலியாத் என்னும் ஒரு இராட்சதன், இஸ்ரவேலின் ராஜாவையும், போர்வீரர்களையும், சகல ஜனங்களையும் கலங்கடித்துக் கொண்டிருந்தான். இஸ்ரவேலிலே இருந்த இளைஞனாகிய தாவீது மட்டும் அந்த இராட்சதனைக் கண்டு பயமடையவில்லை. இஸ்ரவேலர் எல்லாரும் அந்த கெம்பீரமான தோற்றமுடைய பெலிஸ்திய போர்வீரனை காணும்போது அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள். ஆனால் அந்த இராட்சதனின் பயங்கரமான தோற்று த்தினால் தாவீது சற்றும் தயங்கவில்லை. இந்த இராட்சதனின் நிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை. என்று தாவீது அறிக்கையிட்டான். அந்த பெலம் ஏன் மற்றவர்களுக்கு வரவில்லை? அந்த பெலன் அவனுக்கு எப்படி வந்தது? தேவனாகிய கர்த்தர் தாவீ தோடு இருந்தார். தாவீது தேவன்மேல் விசுவாசமாயிருந்தான். அதனால், மற்றவர்கள் கண்களில் மகா பெரிதாக தோன்றிய பிரச்சனை, வாலிபனாகிய தாவீதின் கண்களில் மிகவும் அற்பமாகத் தோன்றியது. எனவே, உங்களை அழுத்தும் சூழ்நிலைகளை உங்கள் மாம்ச கண்க ளால் பார்க்காமல், ஆவிக்குரிய விசுவாசக் கண்களால் பாருங்கள். தடைகளை உடைக்கும் சர்வ வல்லமையுள்ள தேவன் உங்கள் பட்ச த்தில் இருக்கின்றார்.
ஜெபம்:
கலங்காதே திகையாதே நான் உன்னோடு கூட இருக்கின்றேன் என்று கூறிய தேவனே, சூழ்நிலைகளை மாம்ச கண்களால் நோக்காமல், விசுவாச கண்களால் பார்த்து அவைகளை ஜெயிக்க பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 சாமு 17:45