புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 11, 2023)

மகா பெரிய பிரச்சனை என்ன?

சங்கீதம் 33:11

கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்


நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகிலே, உங்கள் வாழ்க்கையிலே சவால்களையும்;, பிரச்சனைகளையும் எதிர்நோக்காத மனிதர்கள் யார்? சமாதானமும் சௌக்கிமும்; உண்டென்று சில மனிதர்கள் சொல்லும்போது, கணப்பொழுதிலே பயங்கரங்கள் அவர்கள் வாழ்வை சூழ்ந்து கொள்கின்றது. உங்களுடைய வாழ்க்கையிலே உங்களை எதிர் நோக்கும் மிகப் பெரிதான பிரச்சனை என்ன? அது எதைக் குறித்ததாக இருக்கின்றது? அடிப்படைத் தேவைகளாகிய உணவு, உடை, உறையுள் சார்ந்தவைகளா? உங்களது அல்லது உங்கள் பிள்ளைகளது கல்வி, செல்வம், அந்தஸ்துக்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதா? எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அவன் மனதுக்கமடைந்தவனாக இருந் தான். அந்த துக்கத்தின் காரணம் என்ன என்று அவனைக் கேட்ட போது, தன்னிடம் பணம் இல்லை என்பதே அதன் காரணம் என அவன் கூறினான். ஆண்டுகள் கடந்து சென்று அவன் ஐசுவரியமுள்ளவனானான். அவனுடைய துக்கம் தீர்ந்து போய்விட்டது. ஆனால் அது அநேக நாட்களுக்கு நிலைக்கவில்லை. தனக்குண்டான செல்வத்தினால் தன் மகனானவன், பொறுப்பற்றவனாக நடந்து, அவன் கெட்டுப் போய்விட்டான் என்று மிகவும் கவலையடைந்தான். இப்படியாக மனிதர்களின் மனம் இல்லாததைக் குறித்து துக்கமடைகின்றது. தங்களிடத்தில் இல்லாதது தங்களுக்கு வரும்போது தங்கள் வாழ்க்கை எப்படியாக மாறிவிடும் என்பதை அறியாதிருக்கின்றார்கள். எனவே நாம், நம்முடைய நாட்களை அறிந்தவராகிய கர்த்தரின் ஆலோசனைகளை நன்றாக கவனி த்து, தியானித்து, அவைகளின்படி நடக்க நம்மை ஒப்புக் கொடுப்பதே, நமக்கு வாழ்விற்கு எக்காலத்திலும் நன்மையாக இருக்கின்றது. நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதி மான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை என்று சத்தியவேதம் கூறுகின்றது. எனவே, இந்த உலகத்தினால் உண்டாகும் அழுத்தங்களுக்கு இடங்கொடுக்காமல், காலத்தை அறிந்த கர்த்தரிடம் உங்கள் சிந்தையை ஒப்புக் கொடுங்கள். கர்த்தருடைய ஆலோசனையே நித்திய காலமாய் நிலைநிற்கும். கர்த்தர் நம் பட்சத்தில் இருப்பதினால், பெரும்புயல் உங்கள் வாழ்க்கையை அடித்து மோதினாலும், நீங்கள் அசைக்கப்படுவதில்லை.

ஜெபம்:

என் காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவனே, இந்த உலக கவலைகளினால் என்னுடைய இருதயம் பாரமடையாதபடிக்கும், நான் கண்ணியிலே சிக்கிவிடாதபடிக்கும் என் ஆத்துமாவை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 21:34