புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2023)

வெற்றி வாழ்விற்கு வழிமுறைகள்

சங்கீதம் 73:24

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.


வாழ்க்கைத்தரம் வளம்பெற, செல்வம் செழிப்போடு வாழ வெற்றிக்கு ஏழுபடிகள் என்றொரு பாடக்கோப்பு அடங்கிய புத்தகமொன்று சொற்ப நாட்களுக்குள்ளே ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டது. அதை எழுதியவர், தன் வாழ்வில் எப்படி வெற்றி ஏற்பட்டது, தன்னுடைய அற்பமான ஆரம்ப நாட்கள், வெற்றிக்கு வழிவகுத்த படிகள், ஐசுவரியம் நிறைந்த நாட்கள் என்று மூன்று பிரிவாக தன்னுடைய அனுபவத்தின் சாரம்சத்தை தொகுத்து வழங்கியிருந்தார். அதை கொள்வனவு செய்தோர் அந்த புத்தகத்தை வாசித்தார்கள், உற்சாகமடைந்தார்கள், சில படிகளை கடந்து சென்றார்கள், சில நாட்களுக்கு பின்போ சோர்ந்து போனார்கள். ஆனால், புத்தகத்தை விற்பனை செய்தவனான ஐசுவரியவானோ, இன்னும் திரளான பணத்தை தனக்கென சேர்த்துக் கொண் டான். புத்தகத்தை கொள்வனவு செய்தவர்கள் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் அவர்களுடைய பிரச்சனையாக இருந்தது. புத்தகத்தை விற்பனை செய்தபின்பு, மேற்கொண்டு, அதை எழுதியவர் எந்த உதவியையும் செய்யப் போவதில்லை. எனவே, அந்தப் புத்தகத்தினால் பிரயோஜனம் அடைந்தவர்கள் ஏற்கனவே வசதியோடு வாழ்ந்த ஒரு சிலராகவே இருந் தார்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவ்வண்ணமாக நமக்கு தம்முடைய ஜீவ வார்த்தைகளையும் ஆலோசனைகளையும் கொடுத்து விட்டு, நம்மை நம்பாட்டிற்கே விட்டுவிடுபவரல்ல. மாறாக, நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதிலும் நம்மோடு கூட இருப்பதற்கு, துணையாளராகிய பரிசுத்த ஆவியானவரை கொடுத்திருக்கின்றார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்திலிருந்து நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கின்றார். நாம் தவறி விழும்போது, நம்மை அப்படியே விட்டுவிடாமல், நம்மை தூக்கி சுமக்கின்றார். அது உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்ற எந்தப் பாகுபாடுமின்றி, ஒருவனும் கெட்டுப்போகாமல் இலக்கை அடைய வேண்டும் என்று சித்தமுள்ளவராக இருக்கின்றார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை. இயேசு கிறி ஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். தம்முடைய ஆலோசனையின்படி அவர்களை நடத்தி முடிவிலே நித்திய மகிமையிலே தம்முடைய சேர்த்துக் கொள்கின்றவராயிருக்கின்றார்.

ஜெபம்:

தாயின் கருவில் என்னை தெரிந்து கொண்ட தேவனே, உம்மு டைய ஆலோசனையின் மேன்மையை உணரக்கூடிய பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து, அவைகளின் வழியிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 10:10-13