புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2023)

தணிந்து போகும் அன்பு

கலாத்தியர் 5:16

ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொ ழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.


ஒரு வாலிபனானவன், ஊரிலுள்ள ஒரு பெண்ணை விரும்பியிருந்ததால், அவளை தனக்கு திருமணம் செய்து தரும்படியாக தன் பெற்றோரை கேட்டுக் கொண்டான். அவ்வண்ணமாகவே அந்தப் பெண்ணும் தன் பெற்றோரிடம் வேண்டிக் கொண்டாள். திருமணம் என்பது விளையாட்டல்ல, வாழ்க்கையின் அர்ப்பணிப்பு என்று இருவருடைய பெற்றோர்களும் பல ஆலோசனைகளை தங்கள் பிள்ளைகளுக்கு கூறினார்கள்;. அந்த வாலிபனானவன், தான் எந்த நிபந்தனையுமின்றி அந்தப் பெண்ணை அன்பு செய்வதாக கூறினான். அவளும், தான் எல்லா விடயங்களிலும் அவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்வேன் என்று உறுதியாகக் கூறினாள். மேலும் அவர்கள் தங்கள் பெற்றோர்களை நோக்கி: இது உங்களுடைய நாட்களைப் போல அல்ல, இது புது யுகம். நாங்கள் சிறப்பாக வாழ்வோம் என்று திட்டமாக கூறினார்கள். அவர்களின் பேச்சின்படி, அவர்கள் ஒரு வருக்காக ஒருவர் மரிப்பதற்கும் ஆயத்தமாக இருந்தார்கள். திருமணம் முடிந்து ஒரு வருடம் சென்ற பின்பு, அவர்களுடைய வாழ்க்கையிலே சவால்கள் வந்த போது, அன்புக்கும், கீழ்படிதலுக்கும் இடமில்லாமற் போயிற்று. இனிமையாக பேசிய வார்த்தைகள் எல்லாம் கசப்பாக மாறியது. ஒருவருக்காக ஒருவர் மரிக்க ஆயத்தமாக இருந்தவர்கள், ஒருவரை ஒருவர் கொன்று போடுமளவிற்கு அவர்களுடைய மனதிலே வெறுப்பு குடிகொண்டது. அப்படியானால், அன்பு ஒருக்காலும் ஒழியாதது என்றால், அவர்கள் திருமணமாக முன்பு அவர்கள் இருவருக்குமிடையே இருந்த உறவின் பிணைப்பு என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள். மாம்சத்தின் எண்ணங்கள், சௌந்தரியம், அழகு போன்ற வெளித்தோற்றங்களை மட்டும் மையமாக கொண்ட உறவுகள் எப்பொழுதுமே அநித்தியமானவைகள். ஆசை இச்சைகள் போன்றவைகளே அங்கே மையமாக இருந்தது. அந்த இளம் தம்பதிகளுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, வளர்ந்தோர், முதிர்ந்தோரின் வாழ்க்கையிலும் இவைகளை நாம் காண்கின்றோம் அல்லவா? சில தேவபிள்ளைகளுடைய வாழ்விலும் இத்தகைய நிலைமைகள் உண்டாகின்றதல்லவா? ஏன் அப்படி உண்டாகின்றது? திருமண வாழ்க்கை மட்டுமல்ல, மாம்சதின் இச்சைகளினால் உண்டாகும் எந்த ஒரு உறவும் நிலையற்றதா கவே இருக்கும். தேவனால் உண்டாகும் அன்பே நிலையான அன்பு. அவருடய ஆலோசனையின் வழியிலே நடக்க தன்னை ஒப்புக் கொடுகின்றவன் மாம்ச இச்சைகளுக்கு இடங்கொடுக்காமல் தேவன்மேல் வைத்த விசுவாசத்தினாலே அவைகளை ஜெயங் கொள்கின்றவனாக இருப்பான்.

ஜெபம்:

நித்திய வாழ்வுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருந்து அன்பு என்னும் நற்கனியிலே அனுதினமும் பெருகும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிரசங்கி 4:13