புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2023)

பிரகாசமுள்ள நட்சத்திரம்

ரோமர் 8:29

தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தன் சிறுபிராயத்திலிருந்தே, தனக்கு பிரியமான விளையாட்டு துறையிலுள்ள நட்சத்திர வீரனை (Sports Star) போல தன் உடலை பேண வேண்டும் என விரும்பி, தினமும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பல பயிற்சிகளை செய்து வந்தான். அவனுடைய மாதிரியாக (Model) இருந்த விளையாட்டு வீரனைப் போல, அவனுடைய வெளித் தோற்றமும் மாற்றமடைய ஆரம்பித்தது. தன்னுடைய முயற்சியின் பல னைக் கண்டு அவன் பெருமிதம் அடை ந்தான். அவனுடைய தோற்றம் அவனுடைய தன்நம்பிக்கையாக மாறிவிட்டது. நம்முடைய மாதிரி யார்? நம்முடைய நட்சத்திரம் யார்? நம்முடைய மீட்பராகிய இயேசுவே நமக்கு பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கின்றார். வானத்திலே இருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களும், இந்த பூமியிலே தோன்றும் மனித நட்சத்திரங்களும் நிலையற்றவைகள். ஆனால், நம்முடைய பிரகாமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசு கிறிஸ்து, இருக்கிறவரும் இருந்தவரும்வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: அவர் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். இந்த உலக நட்சத்திரங்கள் தங்கள் புகழுக்கும், பெருமைக்கும், ஆஸ்தியை விருத்தி செய்வதற்கும் இரசிகர்களை திரளாக்கி கொள்கின்றார்கள். ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுவோ, நம்மிடத்தில் அன் புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கின்றார். தம்மைப் பின்பற்றுகின்ற யாவரும் தம்மைப்போல மாற வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஏழை எளியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமைகளை இந்த உலக நட்சத்திரங்கள் காண்பிக்கிறார்கள். ஆனால், நம்முடைய கர்த்தரோ, ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற சித்தமுள்ளவராக இருக்கின்றார். எனவே, அந்த வாலிபன் மனவாஞ்சையோடு, தன் வெளித்தோற்றத்தை மாற்ற பெரும் பிரயாச ப்பட்டதைவிட, நாமும் நம்முடைய உள்ளான மனிதன் இயேசுவைப் போல மாறும்படிக்காய் நாம் இன்னும் அதிகமாக பிரயாசப்பட வேண்டும். பாடுகள் துன்பங்களின் நாட்களிலும், சோர்ந்து போகாமல், நம்முடைய மாதிரியாகிய இயேசுவின் தெய்வீக சுபாவங்கள் நம்மில் உருவாகும்படி க்கு நம்மை நாம் ஒப்புகொடுப்போமாக.

ஜெபம்:

அழியாமைக்கென்று என்னனை அழைத்த தேவனே, அழிந்து போகின்ற இந்த உலகத்தின் காரியங்களுக்காக நான் பிரயாசப்படாமல், இயேசுவின் சாயலிலே வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2

Category Tags: