புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 27, 2023)

தேவைகளினால் உண்டாகும் நெருக்கம்

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு


அன்றன்றைய நாளுக்குரிய தேவைகளுக்காக உழைத்து வந்த ஒரு விசுவாசியானவன், தன் கடும் பிரயாசத்தின் பலனினாலே தன்னுடைய குடும்ப விவகாரங்களை கவனித்து வந்தான். நாட்டின் அமைதியற்ற சூழ்நிலைகளினால், சகலருக்குமான வேலை வாய்ப்பு குறைந்து போனது. அன்றாட ஆகாரத்திற்குரிய உணவுப் பொருட்களின் விலைவாசிகள் அதிகரிக்க ஆரம்பித்தது. பிழைப்புக்களுக்காக சூழ இருந்த மனிதர்களில் சிலர், மற்றவர்களுடைய தோட்டங்களுக்கு சென்று, களவாக சில காய் கறிகளை எடுத்து, சந்தையில் விற்று பிழைத்துக் கொண்டார்கள். தரித்திரத்தினால் உண்டான நெருக்கமானது, அந்த விசுவாசியானவனை மிகவும் வாட்டியதால், தான் அந்த மனிதர்களோடு இணைந்து கொள்வோமோ என்று தன் படுக்கையிலே இருந்து சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆனால், திடீரென்று 'விசுவாசி அவனென்றும் பதறான். அவன் நங்கூரம் இயேசுவில் உண்டு' என்ற ஒரு அழகான பாடலின் வரிகள் தன் மனதில் ஒலித்ததை உணர்ந்தான். உடனடியாக அவன் முழங்காலிலே நின்று, கர்த்தாவே, தரித்திரத்தினாலே நான் திருடி, என் தேவனாகிய உம்முடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கு, என் படியை எனக்கு அளந்து என்னை போஷித்தருளும் என்று ஜெபித்தான். அவன் கர்த்தருடைய வேளைக்காக காத்திருக்க தீர்மானித்தான். பிரியமானவர்களே, ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷpத்தவர்கள் அல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, இந்த உலகத்தின் தேவைகளுக்காக, நீங்கள் உங்கள் ஆத்துமாவை வஞ்சித்து, தேவ ராஜ்யத்தையும், அதன் நீதியையும் தேடுவதை விட்டுவிடாதிருங்கள். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. எனவே, திடமனதோடு கர்த்தருடைய வேளைக்காக காத்திருங்கள்.

ஜெபம்:

பஞ்சகாலத்திலே திருப்தியாக்கும் தேவனே, என் குறையிலே நான் உம்மை மறுதலிக்காதபடிக்கு, விசுவாசத்திலே உறுதியாக இருந்து, உம்முடைய வேளைக்காக காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:25