புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 24, 2023)

அர்ப்பணிப்பு

2 தீமோத்தேயு 3:14

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு;


ஒரு ஊரிலே வசித்து வந்த விசுவாசியானவன், தன் பிழைப்புக்காக தன் வீட்டிற்கு பின்புறமாக ஒரு சிறிய வாழைத்தோட்டதை வைத்திருந்தான். அந்த ஊரிலே வசித்து வந்த விவசாயிகள், தங்கள் அறுவடைகளை சந்தைப்படுத்தும்படிக்கு ஞாயிறுதோறும் காலையிலே கூடிவருவார்கள். அந்த சந்தையானது பட்டணத்திற்கு அருகில் இருந்ததால், பொருட்கள் யாவும், சீக்கிரமாக நல்ல விலைக்குவிற்று தீர்க்கப்பட்டுப் போய்விடும். காரியம் அப்படியிரு ந்தாலும், அந்த விசுவாசியானவன், வாரத்திலே ஏழு நாட்கள் உண்டு, ஞாயிறு காலை தான் தன்னை படைத்த ஆண்டவரை சந்திக்கும் நேரம் என்று தன் அறுவடையின் பலனை வேறு நாட்களிலே சந்தைப்படுத்தி, தான் ஆதியிலே கொண்ட அன்பின் அர்ப்பணிப்பிலே வைராக்கியமாக இருந்து வந்தான். அவனுடைய பிள்ளைகளிலொருவன் வளர்ந்து, தன் தந்தையின் தோட்டத்தை பெருப்பித்தான். கணனி ஊடக வழியாக, அறுவடைகளை சந்தைப்படுத்தும்படி பல நவீன சந்தைப்படுத்தும் வழிகளை அவன் பயன்படுத்தி வந்தான். வியாபாரமானது நன்றாக விருத்தியடைந்து வந்தது. கிழமை நாட்களிலே வியாபார அலுவலாக பட்டணங்களுக்கு சென்று வந்த அவன், பட்டணத்திலுள்ள சில முக்கிய பிரமுகர்களை ஞாயிற்று கிழமைகளிலே அவர்களுடைய வசதியின்படி சந்திக்க வேண்டும் என்று அறிந்து கொண்டான். அதற்காக, தன் ஆராதனை நேரங்களை மாற்றிக் கொண்டான். தான் செல்லும் பட்டணங்களிலே, ஞாயிறு காலையில்லையென்றால், ஞாயிறு மத்தியானம், ஞாயிறு மத்தியானம் இல்லையென்றால், ஞாயிறு மாலை, ஞாயிறு மாலையில்லையென்றால் சனிக்கிழமை மாலை என்று பட்டணத்திலே தனக்கு தென்படும் ஏதோ ஒரு ஆலயத்திற்கு சென்று வந்தான். அவனுடைய எண்ணப்படி ஏதோ ஒரு ஆலயதிற்கு, ஏதோ ஒரு நாளிலே சென்று வந்தால் போதும் என்று ஆலயத்திற்கு செல்வதால் தான் தேவனுக்கு தான் உதவி செய்கின்றேன் என்ற எண்ணமுடையவனான். இப்படிப் பட்டவர்களிடம் தேவ அன்போ, தேவ பயமோ இல்லை. தேவனுடைய வார்த்தை இவர்கள் இருதயத்தில் விழுந்து, முளைத்து, பலன் கொடுப்பதற்கு, இப்படிப்பட்டவர்களின் இருதயம் பண்படுத்தப்படவில்லை. இந்த உலகமானது, தகப்பனானவனைவிட மகனானவன் அறிவுள்ளவன் என்று மெச்சிக்கொள்ளும். ஆனால் இப்படிப்பட்வர்கள், உலக ஐசுவரியத்திற்காக தேவனுடைய காரியங்களை மாற்றியமைப்பதற்கு தயக்கம் கொள்ளமாட்டர்கள். நீங்களோ, கற்றவைகளில் உறுதியாய் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

மேலானவைகளை தேடுங்கள் என்று சொன்ன தேவனே, கிறிஸ்துவை பற்றி வாழும் வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்தவனாக நான் அர்ப்பணிப்போடு எப்போதும் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 3:1-5