புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 09, 2023)

ஜீவனுள்ள புதிய மார்க்கம்

யோவான் 20:21

உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக


பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு இயேசுவை பிடிக்க வந்தார்கள். அப்பொழுது அவருடைய சீஷர்கள் எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். சிலுவையில் மரித்த இயேசுவின் சரீரத்தை எடுத்து, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்தான். யூதர்கள் கல்லுக்கு முத்திரை போட்டு, காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாயிற்று. அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நம்பியிருந்தார்கள். அவர்கள் வாழ்க்கையிலே நம்பிக்கையில்லாத சூழ்நிலை உண்டாயிற்று. பல அற்புதங்கள் அதிசயங்கள் செய்த சீஷர்கள், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகளை பூட்டி வீட்டிற்குள் இருந்தார்கள். அந்த வேளையிலே, அவர்களால் நம்ப முடியாத பெரிதான அதிச செயல் உண்டாயிற்று. ஆண்டவர் இயேசு வந்து அவர்கள் நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். வாழ்க்கையிலே பெரிதான பயம், துக்கம், மறுதலிப்பு, கண்ணீர் உண்டாயிருந்த வேளையிலே, ஒரு புதிய நம்பிக்கை, புதிய வாழ்வு உண்டாயிற்று. மரணத்தை வென்று உயிர்தெழுந்து தேவகுமாரனாகிய இயேசு தம்முடைய சீஷர்களின் பெலவீனத்தை பாராமல், அவர்களை தேடி வந்து அவர்களை தேற்றி, உறுதிப்படுத்தினார். அவர்களுக்கு மட்டுமல்ல, தம்மை விசுவாசிக்கின்ற வர்கள் யாவரும், புதிய வாழ்வை கண்டடையும்படி ஜீவனுள்ள பதிய மார்க்கத்தை மகா பிராதான ஆசாரியராகிய இயேசு உண்டாக்கினார். அவர் நம்முடைய பலவீனங்களைக கண்டு நம்மை தண்டிக்கின்றவர் அல்ல. அவர். எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார். அதனால் நம்முடைய நிலைமைய அவர் அறிந்திருக்கின்றார். நம்முடைய வாழ்க்கையிலே, மனித அதிகாரங்களினால் நெருக்கங்கள் உண்டாகும் போது, பயம் மனதை ஆட்கொண்டு விடுகின்றது. நம்முடைய அறிவுக்கெட்டியபடி நாம் பாதுகாப்பை தேடி ஒளிந்து கொண்டாலும், எம்மீது அன்புகூர்ந்து எமக்காக பலியான இயேசு நம் நடுவே இருக்கின்றார். அவர் நமக்கு சமாதானத்தை தருக்கின்றார். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? இந்த உலகத்திலிருப்பவனைப் பார்;க்கிலும் நம்மோடு இருப்பவர் பெரியவராயிருக்கின்றார். ஜெயங் கொண்டவர் நம் பக்கதிலிருப்பதினால் நாமும் ஜெயங்கொள்கின்றவர்களாக வாழ்வோமாக.

ஜெபம்:

ஜெயம் கொடுக்கும் தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் உபத்திரவங்களை கண்டு சோர்ந்து போகாமல், உறுதியோடு உம்மில் நிலைத்திருந்து, உம் சித்தத்தை நிறைவேற்ற எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 1:6-8