புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 06, 2023)

விசுவாச அறிக்கை

யோவான் 17:22

நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.


நம்முடைய வாழ்க்கையிலே பல சத்தங்கள் எங்கள் காதுகளிலே ஒலிக்கின்றது. பெற்றோரின் சத்தம், பிள்ளைகளின் சத்தம், கணவன், மனைவி, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்யும் இடங்களிலே இயக்குனர், சக ஊழியர்களின் சத்தங்கள் கேட்கின்றன. நாளாந்த வாழ்க்கை, விசேஷித்த கொண்டாட்ட தினங்கள், திருநாட்கள், பெருநாட்கள், துக்கங் கொண்டாடுத லின் நாட்கள் என்று பல சம்பவ ங்கள் மத்தியிலும் இந்த சத்தங்கள் பலவிதமாக கேட்கின்றது. இப்படி யாக பல சத்தங்கள் மத்தியிலும், மேட்டிலும் பள்ளத்தாக்கிலும் நம்முடைய மேய்ப்பராகிய இயேசுவின் சத்தமும் தொனிக்கின்றது. இந்த சத்தங்களிலே நாம் எந்த சத்தத்தை நம் வாழ்க்கையிலே மேன்மைப்படுத்துகின்றோம் என்பதை நாம் ஆராய்ந்து நம் நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, மேய்ப்பராகிய இயேசுவின் சத்தம் தொனிக்கின்ற வேளையிலே, வேலை தளத்திலே இயக்குனரின் சத்தம் அதற்கு விரோதமாக கேட் கின்றது. ஆண்டவர் இயேசுவின் சத்தத்திற்கு செவிகொடுத்தால், இயக்குனரின் நன்மதிப்பை இழக்க நேரிடும். இயக்குனரின் சத்தத் திற்கு கீழ்படிந்தால், அவருடைய ஆதரவுக்கு உட்பட்டிருக்கலாம். அந்த ஆதரவினாலே பூவுலகின் மகிமை உண்டாகும். ஆனால், நித்திய ஜீவனை இழக்க நேரிடும். ஏனெனில், நித்திய ஜீவனைக் கொடுக்கின்ற வார்த்தையெல்லாம் ஆண்டவர் இயேசுவினிடத்திலேயே உண்டு. சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆண்டவராகிய இயேசுதாமே, தம்மை பின்பற்று கின்றவர்களுக்கு, பிதாவினால் உண்டான மகிமையை கொடுத்தார். ஆண்டவர் இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே, யூத அதிகாரிகளிலே அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். நம் மீட்பராகிய இயேசு தாமே கெத்சமனே பூங்காவிலே நமக்காய் வேண்டுதல் செய்யும் சத்தத்தை எண்ணிப் பாருங்கள். நாம் நித்திய மகிமையை அடையும்படி தம்மையே தாம் உயிர்த்தியாகம் செய்தார். எனவே மனிதர்களால் உண்டாகும் அழிந்து போகும் மகிமையை மேன்மைப்படுத்தாமலும், தேவனால் உண்டான மகிமையையே வாஞ்சித்து நாடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனைத் தருவேன் என்று சொன்ன தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் அற்பமான மேன்மைக்காக, பரலோக மேன்மையை நான் அற்பமாக்காதபடிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 28:23