புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 02, 2023)

உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்

சகரியா 9:9

அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருகிறவருமாயி ருக்கிறார்.


ஒரு தேசத்தை ஆட்சி செய்து வந்த ராஜாவிற்கு குமாரனொருவன் இருந்தான். அந்த ராஜ குமாரனானவன், தன் சிறிய பிரயாத்திலிருந்து, ராஜ்யத்தின் தலைநகருக்கு பல முறை இளவரசனுடைய மகிமையோடு சென்று வந்தான். அவன் வளர்ந்து பெரியவனாகிய போது, வழமை போல வருடாந்தம் தலைநகருக்கு செல்ல ஆயத்தப்பட்டான். ஆனால், தலைநகரை முற்றுகையிட எதிரிகள் சதிசெய்திருக்கின்றார்கள் என்ற செய்தி ராஜாவிற்கு வந்தது. தன்னுடைய குமாரானானவன், அந்த யுத்தத்தை நடத்த வல்லவனாக இருந்த போதும், தன் குமாரனானவனுக்கு ஆபத்தானது நேரிடக் கூடாது என்பதற்காக தன் குமாரனுக்கு பதிலாக, வேறு ஒரு மந்திரியை அங்கே அனுப்பி வைத்தார். ஏன் அந்த ராஜா அப்படிச் செய்தார்? ராஜாவாகிய தந்தையானவர், பதினாயிரம் படைகளை தான் இழந்து போனாலும், அதி சிறந்த மந்திரிகள் மரித்துப் போனாலும், தன் ராஜ குமாரனானவனுக்கு எந்தக் கஷ்டமோ, அவமானமோ வருவது நல்லதல்ல என்று அவனை தன் அரண்மனையிலே வைத்திருந்தார். பிரியமான வர்களே, நம்முடைய பரம தந்தையாகிய தேவனோ, தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய மீட்பர் இயேசுவை நமக்காக இந்த உலகத்திற்கு அனுப்பினார். திருக்குமாரனாகிய இயேசுவோ, தான் வளர்ந்து வந்த நாசரேத் என்னும் ஊரிலிருந்து, பலமுறை தலைநகராகிய எருசலேமிற்கு சென்றிருந்தார். ஆனால், இந்தமுறை அவர் ஏறத்தாழ 33 வயதுடையவராக எருசமேலிற்கு வருகை தருகின்றார். உலகம் முழுவதும் பாவ த்தில் மரித்து, நித்திய ஆக்கினையை அடையாமல், அடைபட்டிருக்கும் பரலோகத்தின் வாசலை திறக்க தன் ஏகசுதனான இயேசு பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும், சொந்த ஜனங்களாலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், அவமானமும், நிந்தையை அடையவும், கோரமான மரணத்தை சந்திக்கவும் வேண்டும் என்று சர்வ வல்லமையுள்ள பரம பிதாவானவர் அறிந்திருந்தார். இன்னும் சில நாட்களிலே, தான் தன்னை பாவ நிவாரண பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று பரலோகத்தின் செல்லப் பிள்ளையாகிய இயேசுவும் அறிந்திருந்தார். அதற்காக இந்த உலகத்திற்கு வந்தேன் என்றவர், தாழ்மையோடு எருசலேமிற்கு வருகை தந்த நாளை இன்று நாம் நினைவு கூருகின்றோம்.

ஜெபம்:

பரலோக பிதாவே, உம்முடைய திருச்சித்தம் நிறைவேறும்படி, தம்மை ஒப்புக்கொடுத்த உம்முடைய குமாரனைப் போல, நானும் மனத்தாழ்மையுடையவனாக உம் சித்தத்தை நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 12:12-18