புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 28, 2023)

நம்மை பரிசுத்தமாக்கும் தேவன்

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்


'நான் சிறுபிள்ளையாக இருந்த நாட்களிலே, என்னுடைய பெற்றோர் என்னை இரக்கமின்றி தண்டித்தார்கள். எனவே, நான் என்னுடைய பிள் ளைகளை தண்டிக்கவோ, கண்டிக்கவோ மாட்டேன். அவர்களை அன்பு காட்டி வளர்ப்பேன். இல்லை என்னும் வார்த்தை எதிர்மறையானது, எனவே ஆம் என்னும் ஆக்கபூர்வமான வார்த்தையே அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் என்று ஒரு விசுவாசி தன்னுடைய பிள்ளை வளர் ப்பைக் குறித்து கூறிக்கொண்டான்.' இந்தக் கூற்றானது கேட்பதற்கு நலமானதும், இந்த உலகத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவுமாக இருக்கின்றது. நெறிப்படுத்துதல், சீர்திருத்தம், சுத்திகரிப்பு, கண்டித்து உணர்த்துதல், கடிந்து கொள்ளுதல், பிழைதிருத்தம், வனைதல், எச்சரிப்பு, சிட்சை, கிளை நறுக்குதல் போன்ற வார்த்தைகள் வேதத்தில் பரிசுத்தமாகுதலைக் குறித்து கூறப்பட்ட அடிப்படை வார்த்தைகளாக இருக்கின்றது. ஒருவேளை மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்திலுள்ள விசுவாசியின் பெற்றோர்கள் இரக்கமற்றவர்களாக இருந்திருக்கலாம். அது குறிப்பிட்ட அந்தப் பெற்றோரின் தவறாக இருக்கலாம். அதனால் தன்னுடைய பிள்ளைகளை நெறிப்படுத்தாமல் வளர்ப்பேன் என்பது வேதம் கூறும் அறிவுரைக்கு எதிரானதாக இருக்கின்றது. அப்படி வேதத்தின் ஆலோசனைகளுக்கு எதிராக செயற்படுகின்றவர்கள், சிறுவர்களுக்கோ, வாலிபர்களுக்கோ, முதியவர்களுக்கோ தேவ ஆலோசனை கொடுப்பதை தவிர்த்துக் கொள்வது அவர்களுக்கு நல்லது. ஏனெனில், அவர்கள் மனநிலை இன்னும் பாதிக்கப்பட்டு, பெற்றோரை மன்னிக்க முடியாமலும், இருதயம் குணமடையாமல் இருப்பதனால், வேதத்தின் ஆலோசனைகளின்படியல்ல, மாறாக தங்கள் மனநிலையை மையமாக வைத்தே ஆலோசனைகளை கூறுவார்கள். உண்மையாக தங்கள் பிள்ளைகளை நேசிக்கின்ற எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நற்பலன்களைக் கொடுக்கும்படி, அந்தந்தக் காலத்திலே அவர்களை சிட்சிக்கின்றார்கள். (எபி 12:6-11). உண்மையான நண்பனானவன், தன் நண்பனை உரிமையோடு கடிந்து கொள்வான் (நீதி 27:6). நாம் எந்த வயதுடையவர்களானாலும், பரம பிதாவின் பிள்ளைகளாயிருக்கின்றோம். எனவே தேவ ஆலோசனை களை அசட்டை பண்ணாமலும், சிட்சைகளை அற்பமாக எண்ணாமலும், கடிந்து கொள்ளும்போது சோர்ந்து போகாமலும் இருப்போமாக.

ஜெபம்:

உம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்மைச் சிட்சிக்கிற தேவனே, வேதத்தின் ஆலோசனைகளின் வழியிலே நான் வாழும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:17

Category Tags: